குப்பை பிரச்னை: கிராமங்களிலும் விரிவடையும் பாதிப்பு
பல்லடம்; குப்பை பிரச்னை ஊராட்சிகளிலும் விரிவடைந்து வருவதால், கிராமங்களும் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளன.திருப்பூர் மாநகராட்சி குப்பைகள், கழிவுகள் உள்ளிட்டவை, மாவட்டப் பகுதிகளில் உள்ள பயன்பாடற்ற பாறைக்குழிக்குள் கொட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பொங்குபாளையம் ஊராட்சி, காளம்பாளையம், கீரனுார், இச்சிப்பட்டி, கரைப்புதுார், இடுவாய் என, அடுத்தடுத்து பொதுமக்கள் குப்பைகள் கொட்ட எதிர்ப்பு தெரிவிக்க, இதற்கு தீர்வு ஏற்படுத்தியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்துக்கு திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் தள்ளப்பட்டுள்ளது. மாநகராட்சிக்கான
பிரச்னை மட்டுமா?
குப்பை பிரச்னை என்பது ஏதோ மாநகராட்சி சார்ந்தது என்று மட்டுமே கருத இயலாது. மக்கள் தொகை பெருக்கம், தேவைக்கு அதிகமான நுகர்வு, பொதுமக்களின் அலட்சியம் என, பல்வேறு காரணங்களால், மக்கும்- மக்காத குப்பைகள், கழிவுகள் உள்ளிட்டவை ரோட்டில் குவிக்கின்றன. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் மட்டுமன்றி, ஊராட்சி பகுதிகளிலும் இது விரிவடைந்து வருகிறது. நகரப் பகுதிகளில், குவியும் குப்பைகளை அகற்ற, தேவையான வாகனங்கள், துப்புரவு பணியாளர்கள் இருக்கின்றனர். ஆனால், விவசாயம், கால்நடை வளர்ப்பு தொழிலை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட கிராமங்களில் இது போன்ற பிரச்னைகள், மிகப்பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பினை ஏற்படுத்தும். மாநகராட்சியை போன்றே, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகள், அதிகப்படியான குப்பைகள் சேகரமாவதால், தீர்வு காண முடியாமல், பாறைக்குழிகள், குளம் குட்டைகள், பயன்பாடற்ற கிணறுகள் உள்ளிட்டவற்றில் கொட்டி நீர் நிலைகளை பாழாக்கி வருகின்றன. மாயமான
நீராதாரங்கள்
கடந்த காலத்தில் நீர் ஆதாரமாக இருந்த பல கிணறுகள், இன்று, கிராம வரைபடங்களில் மட்டுமே உள்ளன. கிராம எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பை கொட்ட இடம் இல்லாமல், அடுத்த கிராமங்களுக்கு செல்வதும், நகராட்சி, பேரூராட்சிகளில் இருந்து, அத்து மீறி கிராமப் பகுதிகளில் கொண்டு வந்து குப்பைகளை கொட்டுவதும் வாடிக்கையாகிவிட்டது. து பெயரளவுக்கு மட்டுமே உள்ளது. மக்கும் - மக்காத குப்பைகளை பிரிப்பதற்காக, கிராமப் பகுதிகளில் தோண்டப்பட்ட குழிகளில் புல் பூண்டுகள் முளைத்துள்ளன. தரம் பிரிக்கும் மையங்கள், 'குடி'மகன்களின் கூடாரமாக உள்ளன. எனவே, இச்சிப்பட்டி கிராமத்தில் துவங்கி, விஸ்வரூபம் எடுத்த குப்பை கொட்டும் பிரச்னை என்பது, திருப்பூர் மாநகராட்சிக்கு மட்டுமானது அல்ல. இது, நகராட்சி, ஊராட்சிகளுக்கும் பொருந்தும். நகரங்கள் வேகமாக வளர்ந்து வருவதால், கிராமப் பகுதிகளும் கபளீகரம் செய்யப்பட்டு வருகின்றன. இதனாலேயே ஊராட்சிகளிலும் குப்பைகளின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, அதிக மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளை ஒருங்கிணைத்து, புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, குப்பை மேலாண்மையை முறைப்படுத்த வேண்டும். மக்கும் குப்பைகளை உரமாக்குவதுடன், நெகிழி உள்ளிட்ட மக்காத குப்பைகளை முடிந்த அளவு தவிர்க்க பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும். இல்லையெனில், விவசாயம், கால்நடை வளர்ப்பு தொழிலை ஆதாரமாகக் கொண்ட கிராமப் பகுதிகளின் வளர்ச்சி கேள்விக்குறியாகிவிடும். நெகிழிக்கு எதிரான குரல்
பல்லடம் - இச்சிப்பட்டி முதல் பல்வேறு கிராமங்களில் நடந்த பொதுமக்களின் போராட்டங்களின் போது, நெகிழி பை குறித்து அதிகம் பேசப்பட்டது. அவற்றின் பயன்பாட்டை தடுக்க வேண்டும் என்பதுடன், உற்பத்தியையே நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு பகுதிகளிலும் முன்வைக்கப்பட்டது. நெகிழிப் பைகளின் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எண்ணமாக உள்ளது. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை, வியாபாரிகள், பொதுமக்களின் ஒத்துழைப்பு ஆகியவற்றால் மட்டுமே நெகிழியை நிரந்தரமாக ஒழிக்க முடியும் என்பதே நிதர்சனம்.