வீதியோரம் குப்பை சிதறல்: முடங்கியது வியாபாரம்! கொங்கு மெயின் ரோட்டில் வியாபாரிகள் புலம்பல்
திருப்பூர்; 'ஒரு தொழில் முடங்குவதற்கு வியாபாரத்தில் நஷ்டம், லாபம் குறைவு என பல காரணங்கள் கூறப்படும் நிலையில், 'கடைக்கு முன் கொட்டப்படும் குப்பை குவியலால் கடையையே மூடும் நிலை ஏற்பட்டுவிட்டது' என, புலம்பும் நிலையை உருவாக்கியிருக்கிறது, திருப்பூர் மாநகராட்சியின் துாய்மைப்பணி. திருப்பூர் மாநகராட்சி எதிர்கொண்டு வரும் பிரச்னைகளில் பெரும் சவாலானது, குப்பை மேலாண்மை. வார்டு வாரியாக சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரித்து அப்புறப்படுத்தும் திடக்கழிவு மேலாண்மை திட்டம், செயல்பாட்டில் இல்லை. சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு கூட இடமில்லை. இதனால், குப்பைகளை கொட்ட பாறைக்குழிகளை தேடி அலைய வேண்டிய பரிதாப நிலை, மாநகராட்சிக்கு ஏற்பட்டிருக்கிறது. அதற்கு, அப்பகுதியில் உள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சேகரிக்கும் குப்பைகளை அகற்ற வழியின்றி, மாநகராட்சி நிர்வாகம் திணறி வருகிறது. இந்நிலையில், குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள் நிரம்ப உள்ள திருப்பூர், கொங்கு மெயின் ரோட்டில் குடியிருப்புகள் மற்றும் கடைகள் உள்ள பகுதியில், மாநகராட்சி துாய்மைப் பணியாளர்கள், வீடு, கடைகள் தோறும் சேகரிக்கும் குப்பைகளை, ரோட்டோரம் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டியில் கொட்டுகின்றனர். அவை அகற்றப்படாததால், குப்பை நிரம்பி, சாலையோரம் முழுக்க குவியலாக சிதிறிக்கிடக்கிறது. இதில், அரசால் தடை செய்யப்பட்ட பாலிதீன் கேரி பை உள்ளிட்ட பொருட்கள் தான் அதிகம். 'ரோட்டோரம் உள்ள கட்டடங்களில் ஓட்டல் உள்ளிட்ட கடைகள் செயல்பட்டு வந்த நிலையில் கடை முன் சிதறிக்கிடக்கும் குப்பையால், மக்கள் யாரும் அங்கு செல்வதில்லை; இதனால், கடையையே மூடும் நிலை உருவாகிறது' என கடைக்காரர்கள் புலம்புகின்றனர். எனவே, குப்பை மேலாண்மையில் மாநகராட்சி நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகியுள்ளது.