லாரி மோதி சிறுமி உயிரிழப்பு: தொழிலாளர்கள் போராட்டம்
பல்லடம்: பல்லடம் அருகே, லாரி மோதி ஆறு வயது சிறுமி உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பீஹாரின் ஆரே பகுதியை சேர்ந்தவர் சுராஜ் பஸ்வான், 25; பல்லடம் அருகே, சின்னக்கரை, லட்சுமி நகரில் வசிக்கிறார்; பனியன் நிறுவனத்தில் பணிபுரிகிறார். உறவினர் குழந்தையான, பிஹூ குமாரி, 6 என்ற சிறுமியை பராமரித்து வந்தார் நேற்று காலை, லட்சுமி நகரில், ரோட்டில் விளையாடிக் கொண்டிருந்த பிஹூ குமாரி, திடீரென ரோட்டை கடக்க முயன்ற போது, லாரி மோதி பலியானார். ஆவேசமடைந்த சிறுமியின் உறவினர்கள் லாரியை சிறைபிடித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்லடம் போலீசார், பேச்சுவார்த்தை நடத்தினர். போக்குவரத்து பாதிக்கப்பட, போலீசார், கூடியிருந்தவர்களை விரட்டி அடித்தனர். 'லாரி டிரைவர், ஏற்கனவே ஸ்டேஷனில் சரணடைந்து விட்டார்; கோரிக்கைகளை ஸ்டேஷனில் வந்து தெரிவியுங்கள்' என போலீசார் அறிவுறுத்தினர். குழந்தை, திடீரென ரோட்டை கடக்க முயன்றதே விபத்துக்கு காரணம் என போலீசார் கூறினர்.