திருப்பூரில் அரசு கிளை அச்சகம் திறப்பு; 4 மாவட்ட மக்களுக்கு பயன்
- நமது நிருபர் -திருப்பூரில் அரசு கிளை அச்சகம் திறக்கப்பட்டுள்ளதால், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்ட மக்கள், அரசிதழில் பெயர் மாற்றம் செய்வது எளிதாக மாறிவிட்டது.ஆதார், பான்கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ் என, ஒவ்வொரு அடையாள சான்று ஆவணங்களிலும், பெயர் சரியாக இருக்க வேண்டும். ஒருவேளை தவறாக இருந்தால், சரியான ஆவணங்களை கொண்டு திருத்தம் செய்யலாம்.ஒரு சிலர் பெயர் மாற்றம் செய்ய விருப்பப்படுகின்றனர். பெயர் மாற்றப்படும் போது, அரசிதழில் வெளியிடப்பட வேண்டும். பெயர் மாற்றம் செய்து அரசிதழில் வெளியிட, சேலம் சென்றுவர வேண்டிய நிலை இருந்தது. பெயர் மாற்றம் எளிது
தமிழகத்தில், சென்னை, சேலம், மதுரை, திருச்சி, விருத்தாச்சலம், புதுக்கோட்டை ஆகிய ஆறு இடங்களில் அரசு அச்சகம் செயல்பட்டு வந்தது. அதன், 7வது கிளை, திருப்பூர் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்தின் பின்புறம் திறக்கப்பட்டுள்ளது.அரசுத்துறைகளுக்கான அனைத்தும் இங்கே அச்சிடப்படும்; மாவட்ட நிர்வாகத்தின் முடிவுகளை அறிவிக்கும் அரசிதழ் இங்கிருந்து அச்சிட்டு வெளியிடப்படுகிறது. திருப்பூரில் அரசு அச்சக கிளை திறக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களுக்கு பெயர் மாற்றம் அரசிதழில் வெளியிடுவது எளிதாக மாறியுள்ளது. 3 வாரத்தில் பெயர் மாறும்
கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய நான்கு மாவட்ட மக்கள், திருப்பூர் அச்சக கிளையை பயன்படுத்தலாம். கிளை அச்சகத்தில் படிவங்களை பெற்றும், பதிவிறக்கம் செய்தும், பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை பரிசீலித்து, மூன்று வாரத்தில் அரசிதழில் மாற்றம் செய்து பெற்றுக்கொள்ளலாம். இதற்காக, இடைத்தரகர்களை அணுக வேண்டியதில்லை.பெயர் மாற்றம் செய்ய, 18 வயதுக்கு குறைந்தவர்களாக இருந்தால், பெற்றோர் அல்லது பாதுகாவலரின் சுயசான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.விண்ணப்பதாரர், 18 வயது பூர்த்தியானவராக இருந்தால், சுயசான்றுடன் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு, 0421 2210500 என்ற எண்களில் அணுகலாம் என, கிளை அச்சக நிர்வாகம் அறிவிப்பு செய்துள்ளது. கட்டணம் ரூ.150
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பெயர் மாற்றம் செய்ய, 'படிவம் -1'ல் விண்ணப்பிக்க வேண்டும். தமிழில் பெயர் மாற்றம் செய்ய, 150 ரூபாயும், ஆங்கிலத்தில் மாற்றம் செய்யவும், பெயருடன் மதமாற்றம் செய்யவும், 750 ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும்.திருநங்கை, திருநம்பியர் விளம்பர அறிக்கை செய்ய கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. பெயர் மாற்றம் செய்வதற்கான கட்டணத்தை, www.karuvoolam.tn.gov.inஎன்ற கருவூலத்துறையின் இணையதளம் வாயிலாக, செலுத்தலாம்.விண்ணப்பதாரர்கள், விடுமுறை நாட்கள் நீங்கலாக, காலை, 10:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரையிலும், மதியம், 2:00 முதல், மாலை, 3:00 மணி வரையிலும், கட்டணம் செலுத்தலாம். படிவங்களை நேரிலோ, அல்லது இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்தோ பயன்படுத்த வேண்டும்.தத்து எடுத்த காரணத்தால் பெயர்மாற்றம் செய்ய, அதற்கான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். மதம் மாற்றம் செய்த சான்றிதழ் பெறவும், உரிய கட்டணத்துடன் விண்ணப்பிக்கலாம். பெயர் மாற்றம் செய்யும் படிவத்தை, https://www.stationeryprinting.tn.gov.inஎன்ற இணையதள முகவரியை பயன்படுத்தலாம்.