புதிய மாணவருக்கு வரவேற்பு; அரசு கல்லுாரிகள் தயார்
திருப்பூர்; அரசு கல்லுாரிகளில் இளங்கலை முதலாமாண்டுக்கான வகுப்புகள் இன்று துவங்குகின்றன. புதிய மாணவர்களை வரவேற்க அரசுக்கல்லுாரிகள் தயார் நிலையில் உள்ளன.அரசு கலைக்கல்லுாரிகளில், இளங்கலை பட்டப்படிப்பு விண்ணப்பம் மே, 7ம் தேதி முதல் வினியோகிக்கப்பட்டது.தேர்வு முடிவு வெளியாவதற்கு ஒரு நாள் முன்னதாக, விண்ணப்பம் ஆன்லைனில் வெளியிடப்பட்டதால், பலரும் ஆர்வமுடன் விண்ணப்பித்தனர். சிறப்பு ஒதுக்கீடு, மாற்றுத்திறனாளிகள் கவுன்சிலிங் தொடர்ந்து, இம்மாதம், 4ம் தேதி பொதுப்பிரிவு கவுன்சிலிங் துவங்கியது.மூன்று சுற்றுகளாக கவுன்சிலிங் நடந்து வந்தது. சிக்கண்ணா, எல்.ஆர்.ஜி., கல்லுாரிகளை தவிர மாவட்டத்தில் உள்ள பிற அரசு கல்லுாரிகளில், 95 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளது. இன்று முதலா மாண்டு வகுப்புகள் துவங்கும் நிலையில், மாணவ, மாணவியரை வரவேற்க கல்லுாரி நிர்வாகங்கள் தயாராகி வருகின்றன.