வேலம்பாளையத்தில் அரசு மருத்துவமனை
அனுப்பர்பாளையம்; வேலம்பாளையத்தில் 48.68 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட வேலம்பாளையம் அரசு மருத்துவமனை நேற்று முதல் செயல்பாட்டுக்கு வந்தது. திருப்பூர், 15 வேலம்பாளையத்தில் சிறிய அளவிலான ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வந்தது. அதிக மக்கள் பயன்படுத்தி வந்தனர். மக்கள் தேவைக்கேற்ப அதைத் தரம் உயர்த்த வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். தேசிய மற்றும் மாநில நகர்ப்புற சுகாதார திட்டம், ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை ஆகிய நிதியில், 48.68 கோடி மதிப்பில் அனைத்து வசதிகளுடன் விரிவுபடுத்தப்பட்டு அரசு மருத்துவமனை கட்டப்பட்டது. மருத்துவமனையை, முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக நேற்று திறந்து வைத்தார். திறந்தவுடனேயே செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த மருத்துவமனை, 62 ஆயிரத்து, 226 சதுர அடி பரப்பில் மூன்று தளங்களுடன் கட்டப்பட்டுள்ளது. 86 படுக்கை வசதியுடன் பொது வார்டு, பிரசவ வார்டு, டயாலிசிஸ் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, உள் நோயாளிகள் பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, விபத்து சிகிச்சை பிரிவு, விஷமுறிவு, அனைத்து வகையான ஆய்வகம், எக்ஸ்ரே, ஸ்கேன் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. தற்போது, 12 மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர். இருப்பினும், தேவைக்கேற்ப கூடுதல் மருத்துவர்கள், ஊழியர்கள் தேவைப்படுவர். இவர்களை உடனடியாக நியமிக்க வேண்டும்.