அரசு விடுதியில் அடிப்படை வசதிகள் இல்லை; மேம்படுத்த எதிர்பார்ப்பு
உடுமலை; உடுமலை அரசு கலைக்கல்லுாரி ரோட்டில் உள்ள அரசு மாணவியர் விடுதியில், அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.உடுமலை அரசு கலைக்கல்லுாரி ரோட்டில், அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதி உள்ளது. இந்த விடுதி, 2015ம் ஆண்டு கட்டப்பட்டது. அருகில் உள்ள அரசு கலைக்கல்லுாரி மற்றும் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேரும் மாணவியர் இங்கு தங்குகின்றனர்.தாராபுரம், திண்டுக்கல் மற்றும் மூணார் உட்பட பல பகுதிகளிலிருந்தும், படிக்க வரும் மாணவர்களுக்கான விடுதியாக உள்ளது. ஆனால் அடிப்படை வசதிகள் பராமரிப்பில்லாமல் உள்ளது.கட்டடத்தின் சுற்றுச்சுவர் சேதமடைந்தும், ஜன்னல்கள் உடைந்தும் உள்ளன. இதனால் அடிக்கடி விஷப்பூச்சிகள் உள்ளே புகுந்து அச்சுறுத்துகின்றன. அதிக மழை, காற்று நேரங்களில் ஜன்னல்கள் திறந்தே கிடக்கும் நிலையில், மாணவியர் குளிரால் பாதிப்புக்குள்ளாகின்றனர்.மழைநீர் உள்ளே புகுந்து விடுகிறது. கூடுதல் அறைகளும் இல்லாததால், மழைநீர் புகுந்தாலும் அதே அறையில் தங்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றனர்.இந்த விடுதியில் இரவுக்காவலரும் இல்லை. இரவு நேரங்களில் முறையான பாதுகாப்பும் விடுதிக்கு இல்லை. சுற்றுலா செல்வோர் பலரும், அரசு கலைக்கல்லுாரி ரோட்டில் இரவில் பயணம் செய்வதோடு, வாகனங்களை நிறுத்தி மது அருந்துகின்றனர்.இந்த சூழலில் விடுதிக்கு முறையான பாதுகாப்பு இல்லாமல், மாணவியரை அச்சத்துக்குள்ளாக்குகிறது. சமையல் பணிகளுக்கும் ஆட்கள் பற்றாக்குறையாக உள்ளது. இதனால் உணவு தயார்படுத்துவதிலும் சிக்கல் ஏற்படுகிறது.இவ்வாறு அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படாத அரசு விடுதியின் மீது, பெற்றோர் அதிருப்தியில் உள்ளனர்.மாணவியருக்கு முழுமையான பாதுகாப்புடன், வசதிகளை மேம்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர் மற்றும் கல்லுாரி, தொழிற்பயிற்சி நிலைய நிர்வாகத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.