அரசுப்பள்ளி மாணவர்கள் உயர்கல்வி வாய்ப்பு பறிபோகும்
திருப்பூர்,; மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கைக்கு பதிலாக, மாநிலத்துக்கென பிரத்யேகமாக புதிய பள்ளி கல்விக் கொள்கையை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 1 பொதுத்தேர்வு கட்டாயமானது ஏன்? கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி கூறியதாவது: கடந்த, 2017 வரை பிளஸ் 1 பொதுத்தேர்வு இல்லாமல் தான் இருந்தது. மாணவர்களை மாவட்ட, மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற வைக்க வேண்டும்' என்ற நோக்கில் செயல்பட்ட தனியார் பள்ளிகள், பிளஸ் 1 வகுப்பு பாடங்களை நடத்தாமல், 2 ஆண்டுகள் பிளஸ் 2 பாடங்களை மட்டுமே கற்பித்தனர்; இதனால், உயர்கல்வி வாய்ப்புகளை அதிகளவில் பெற்றனர். ஆனால், அரசுப்பள்ளிகளில் கட்டாயம், பிளஸ் 2 வகுப்பு கற்பித்தாக வேண்டும் என்ற சூழலில், மாணவர்களால் பிளஸ் 2 பொதுத்தேர்வில், தனியார் பள்ளி மாணவர்களுக்கு நிகராக அதிக மதிப்பெண் மற்றும் தேர்ச்சி பெற முடியவில்லை; இதனால், அவர் களுக்கான உயர்கல்வி வாய்ப்பும் கை நழுவியது. கடந்த, 2015 - 2016ல், அண்ணா பல்கலை பட்டப்படிப்பு, முதல் செமஸ்டர் தேர்வில் தனியார் பள்ளிகளில் பயின்று வந்த மாணவர்களில், 30 முதல், 40 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். காரணத்தை ஆராயும் போது, பிளஸ் 1 வகுப்பு பாடங்களை படிக்காமல் மனப்பாட கல்வி முறையில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று வந்ததன் விளைவு தான் என்பது தெரியவந்தது. இதுபோன்ற பல காரணங்களால் தான், 2017ல் பிளஸ் 1 பொதுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. தற்போது மீண்டும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதால், தனியார் பள்ளிகள் அதை சாதகமாக்கிக் கொள்ளும்; இதனால் பாதிக்கப் படுவது, அரசுப்பள்ளி மாணவர்கள் தான். மாணவர் - ஆசிரியர் விகிதம் 20:1 என மாற வேண்டும் 'மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது' என்பதற்காகத்தான், பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது என்ற காரணம் ஏற்புடையதல்ல. மாணவ பருவத்தில், சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதுதான் மாணவர்களின் கடமை. கல்விக் கொள்கையில் முன்பருவ கல்வி குறித்த அறிவிப்பு இல்லை. எல்.கே.ஜி., யு.கே.ஜி., படிக்காமல், முதல் வகுப்பில் நுழைவது, மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தாது. மாறாக, முன்பருவ கல்விக்காக தனியார் பள்ளிகளை நாடும் பெற்றோர், ஆரம்பக்கல்வியையும் தனியார் பள்ளிகளில் தான் தொடரச்செய்வர். இதனால், அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயராது. கடந்த, 1997 வரை அரசுப்பள்ளிகளில், 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதாச்சாரம் இருந்தது. தற்போது, 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற நடைமுறை அமலில் உள்ளது; இதை மாற்றியமைக்க வேண்டும். 'நீட்' தேர்வு; தமிழக அரசின் முரண்பாடு 'நீட்' தேர்வு காரணமாகத்தான், அரசுப்பள்ளி மாணவர்களால் மருத்துவ படிப்புக்குள் நுழைய முடியவில்லை என்பது, சரியான காரணம் அல்ல. 'நீட்' தேர்வு நடைமுறைக்கு வராத முந்தைய, 15 ஆண்டுகளில், 3 சதவீதம் அளவுக்கு கூட அரசுப்பள்ளி மாணவர்களால் மருத்துவப் படிப்புக்குள் நுழைய முடியவில்லை என்பது தான் யதார்த்தம். 'நீட்' தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பது, தமிழக அரசின் நிலைப்பாடு. அவ்வாறு ரத்து செய்யப்பட்டால், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் தான் மருத்துவ படிப்புக்குள் நுழையும் வாய்ப்பு மாணவர்களுக்கு கிடைக்கும். அதே நேரம், பிளஸ் 1 பொது தேர்வும் ரத்து செய்யப்படுவதால், தனியார் பள்ளிகள், பழைய படி, பிளஸ் 1 பாடங்களை கற்பிக்காமல், 2 ஆண்டுகள் பிளஸ் 2 பாடம் கற்பித்து, மாணவ, மாணவியரை அதிக மதிப்பெண் பெறச் செய்து, மருத்துவ படிப்புக்குள் நுழையும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பர். இதனால், பாதிக்கப்படுவதும் அரசுப்பள்ளி மாணவர்கள் தான். 'நீட்' தேர்வில், 7.5 சதவீத இட ஒதுக்கீடு காரணமாக தான் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது எனக் கூறப்படுவதும் ஒரு வகையில் கண்துடைப்பு தான். அரசுப்பள்ளிகளில், 45 சதவீதம்; தனியார் பள்ளிகளில், 55 சதவீதம் பேர் பயில்கின்றனர். மாணவர் எண்ணிக்கை விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது தான் நியாயம்? - மூர்த்தி, ஒருங்கிணைப்பாளர், கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பு