உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கழிவு அகற்ற கேட்டதற்கு கடிதம் எழுதுவதாக பதில் அதிகாரியின் பொறுப்பு: பசுமை ஆர்வலர்கள் கடுப்பு

கழிவு அகற்ற கேட்டதற்கு கடிதம் எழுதுவதாக பதில் அதிகாரியின் பொறுப்பு: பசுமை ஆர்வலர்கள் கடுப்பு

திருப்பூர்; நல்லாற்றில் கழிவுகள் தேங்குவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு, கடிதம் எழுதப்படும் என பொதுப்பணித்துறையின் நீர்வளத்துறையின் பொறுப்பற்ற பதிலால், பசுமை ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி உள்ளிட்ட சுற்றுப்பகுதியில் ஒன்று சேரும் ஓடைகள், சங்கமாங்குளம் பகுதியில் ஒன்று சேர்ந்து நல்லாறாக உருவெடுக்கிறது. இந்த ஆறு, திருமுருகன்பூண்டி வழியாக திருப்பூர் நகரின் வடக்கு பகுதியை கடந்து நஞ்சராயன் குளத்தில் சென்று கலக்கிறது. இந்த ஆறு அவிநாசியை அடுத்த பைபாஸ் ரோட்டைக் கடந்து செல்லும் இடத்தில் ரோட்டின் கீழ் அமைந்துள்ள பாலத்தைக் கடந்து செல்கிறது. அதே போல், திருமுருகன்பூண்டியில், நெடுஞ்சாலையைக் கடந்து செல்கிறது. இந்த ஆறு பாலங்களைக் கடந்து செல்லும் இடங்களில் பெருமளவு பிளாஸ்டிக் போன்ற கழிவுகளால் நிரம்பிக் கிடக்கிறது. பெரும்பாலான பகுதி முட்புதர்கள், மண் மேடுகளால் ஆக்கிரமிக்கப்பட்டும் காட்சியளிக்கிறது.நல்லாற்றில் பாலிதீன் கழிவுகள் தேங்கி கிடப்பதால், ஏற்படும் சுகாதார கேடு மற்றும் ஆற்றின் தன்மை பாதிக்கப்படுவது குறித்தும் முதல்வர் தனிப்பிரிவுக்கு அவிநாசி பகுதி விவசாயிகள் சார்பில் புகார் அனுப்பப்பட்டது. இந்த புகாருக்கு பவானி சாகர் அணைக்கோட்டம், நீர் வளத்துறை செயற்பொறியாளர் அருள் அழகன் அனுப்பிய பதிலில், 'நல்லாற்றில் பாலிதீன் கழிவுகள், பாட்டில்கள் ஆகியன தேங்கி கிடப்பதை அகற்றவும், இனி மேல் இது போல் கழிவுகள் தேங்காமல் இருக்கவும், நெடுஞ்சாலைத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையுடன் கடிதப் போக்குவரத்து மேற்கொள்ளப்படும்,' என 'பொறுப்பான' பதிலை தெரிவித்துள்ளனர். கழிவுகள் அகற்ற வேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு கடிதம் அனுப்புவதாக நீர் வளத்துறை அளித்துள்ள பதில், பசுமை ஆர்வலர்களை வேதனையில் ஆழ்த்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி