உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / காக்க... காக்க... இதயம் காக்க!

காக்க... காக்க... இதயம் காக்க!

மனிதனின் இயல்பான வாழ்க்கை பயணத்தில் திடீர் மரணங்கள் என்பது, அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. அதுவும், கொரோனாவுக்கு பின், இளம் வயது மாரடைப்பு அதிகரித்திருக்கிறது என மருத்துவ உலகமே ஒப்புக்கொண்டு விட்டது.மனிதர்களின் வாழ்வியல் முறை, உணவு பழக்கம், மன அழுத்தம் உள்ளிட்ட பல காரணிகளால், உடலில் கெட்ட கொழுப்பு அளவு அதிகரிக்கிறது. அதிகரிக்கும் கெட்ட கொழுப்பு, மனிதர்களின் ரத்த குழாயில் சென்று படிகிறது. இந்த ரத்த கட்டிகள், ரத்த ஓட்டத்தை பாதித்து, மாரடைப்பு ஏற்பட காரணமாகின்றன. இது தவிர, மரபணு சார்ந்தும் மாரடைப்பு ஏற்படும் என்கின்றனர் மருத்துவர்கள்.தற்போது மாரடைப்பால் பாதிக்கப்படும் 10 பேரில், எட்டு பேர் தீவிர கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர் என்பது ஆய்வில் கண்டறியப்பட்ட நிலையில், இளம் வயது மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணிகள் மற்றும் சதவீதம் குறித்து ஆய்வு நடத்த, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை டாக்டர்கள் திட்டமிட்டுள்ளனர் என்பது, சமீபத்திய செய்தி.அகில இந்திய பொது மருத்துவர் சங்க முன்னாள் தலைவர் டாக்டர் முருகநாதன் கூறியதாவது:பொதுவாக, உலக இதய தினத்தின் போது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற கருப்பொருள் தான் முன்வைக்கப்படும். ஆனால், இந்தாண்டைய கருப்பொருளாக, 'இதயத்தை செயலாக்கத்துக்கு தயார்படுத்துங்கள்' என்ற அறிவுரை முன்வைக்கப்பட்டிருக்கிறது. குடும்பம், நாடு, உலகம் என அனைத்து மக்களும் இதயம் காப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.'அனைத்து மக்களையும் தங்கள் இதயத்தை பாதுகாக்க சொல்லுங்கள்; ஒவ்வொரு தலைவர்களும் மக்களின் இதய ஆரோக்கியத்தை முனைப்புடன் கவனிக்க வேண்டும். அனைத்து நாடுகளும் தேசிய அளவில் ஒரு திட்டம் தயாரிக்க வேண்டும்' என்கிறது உலக இதய சங்கம்.

எமனாகும் உடல் பருமன்!

இதய வியாதி தான் இறப்புக்கு காரணமாக அமைகிறது. இதை தடுக்க ஆரோக்கியமான உணவு உட்கொள்ள வேண்டும்; சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். உடல் பருமன் உடலுக்கு எமன் என்பதால் எடை கூடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். புகை பிடிப்பது தவிர்ப்பது; காற்று மாசு கூட, இதய வியாதியை கூட உண்டாக்கும். காற்று மாசு தவிர்க்க அரசும், மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்; மன அழுத்தத்துடன் இருக்க கூடாது. இதயம் காக்க யோகா, தியானம், இசை கேட்பது, விளையாட்டில் ஈடுபடலாம்; ஏழு மணி நேரம் ஆழ்ந்த உறக்கம் அவசியம்.

'சைலன்ட் கில்லர்!'

உயர் ரத்த அழுத்தம், கொழுப்பு, நீரிழிவு உள்ளவர்களுக்கு இதய நோய் ஏற்படும். உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள வேண்டும். உணவில் அதிக உப்பு சேர்க்க கூடாது; கொழுப்பு நிறைந்த உணவு உட்கொள்ள கூடாது. காய்கறி, பழங்கள், நார்ச் சத்து உள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். ரத்த அழுத்தம் இருப்பின், மருத்துவரின் பரிந்துரைப்படி மாத்திரை உட்கொள்ள வேண்டும்.வீடுகளில் இருந்த படியே, ரத்த அழுத்தம் கண்டறியும் 'ேஹாம் மானிடரிங்' கருவி, 2 ஆயிரம் கிடைக்கிறது; அதை வாங்கி வீடுகளில் வைத்து, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ரத்த அழுத்தம் பரிசோதித்து பார்க்கலாம். வாரத்துக்கு, 150 நிமிடம் உடற்பயிற்சி செய்வது அவசியம். தினமும், 2 மணி நேரத்துக்கு மேல் டிவி, வாட்ஸ் ஆப் உள்ளிட்டவற்றை பார்ப்பதை தவிர்க்க வேண்டும். மாடி படிகளில் இயன்றளவு நடந்து செல்ல வேண்டும்.

உறுதியேற்போம்!

கர்ப்ப காலத்தில் ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய் இருந்தால், பிரசவித்த பின் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். குடும்ப வியாதியாகவும் இதய நோய் வருவதற்கான வாய்ப்புண்டு; எனவே, அவ்வப்போது இதய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். உடலின் துாய்மையான உறுப்பு இதயம் தான்; ஆண்டின், 365 நாளும், 24 மணி நேரமும் இயங்கும்.இதயத்தில் இருந்து தான் அனைத்து பாகங்களுக்கும் ரத்தத்தை செலுத்துகிறது; இது பழுதுபடாமல் பார்த்தால் உடல் சீராக இயங்கும். இதய நோயில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடியும் என்பதை உணர்ந்து, ஒவ்வொருவரும் உறுதியேற்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.-- இன்று (செப்.,29) உலக இதய தினம்உயர் ரத்த அழுத்தம், கொழுப்பு, நீரிழிவு உள்ளவர்களுக்கு இதய நோய் ஏற்படும். உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள வேண்டும். உணவில் அதிக உப்பு சேர்க்க கூடாது; கொழுப்பு நிறைந்த உணவு வேண்டவே வேண்டாம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை