குப்பைத்தொட்டியில் கொய்யா நாற்றுகள்
பல்லடம், : பல்லடம் வேளாண் அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த கொய்யா நாற்றுகள், குப்பை தொட்டிக்கு வந்துள்ளன.வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில், மத்திய மாநில அரசுகளின் சார்பில், விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்கள், சலுகைகள் வழங்கப்படுகின்றன.அவ்வகையில், வேளாண்துறை சார்பில், விவசாயிகளுக்கு வழங்க கொய்யா நாற்றுகள், பல்லடம் வேளாண் அலுவலகத்தில் வளர்த்து பாதுகாக்கப்பட்டுவந்தன. போதிய பராமரிப்பு இன்றி, நுாற்றுக்கணக்கான கொய்யாநாற்றுகள், யாருக்கும் வழங்கப்படாமல்,காய்ந்து கருகி வீணாகி வந்தன.மீதமுள்ள நாற்றுகள், யாருக்காவது பயன்பெறும் வகையில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாற்றுகள் அனைத்தும் வேளாண் அலுவலக வளாகத்தில் உள்ள குப்பை தொட்டிக்கு வந்துள்ளன. மக்கள் வரிப்பணத்தில் நிதி ஒதுக்கி, அதனால், விவசாயிகளுக்கான பல்வேறு மானிய திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன.ஆனால், அதிகாரிகளோ, அவற்றை முறையாக செயல்படுத்தாமல், அலட்சியம் காட்டுவதால், திட்டங்களின் பயன் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு முறையாக சென்று சேர்வதில்லை. குப்பைத் தொட்டிக்கு வந்த கொய்யா நாற்றுகள் இதற்கு உதாரணம்.