கைகொடுத்த இயற்கை! களைகட்டிய பொங்கல் கொண்டாட்டம்: கால்நடைகளை வழிபட பட்டி அமைப்பு
உடுமலை: உழவுத்தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும், இயற்கைக்கு நன்றி சொல்ல, உற்சாகமாக பொங்கலிட்டு வழிபட்ட மக்கள், இன்று மாட்டுப்பொங்கலுக்கு தயாராகி வருகின்றனர்.உடுமலை, பொள்ளாச்சி சுற்றுப்பகுதிகளில், பொங்கல் விழா கொண்டாட்டங்கள், நேற்று முன்தினம் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. வீடுகளில், வேப்பிலை, சிறுபூளைப்பூ மற்றும் ஆவாரம் பூ வைத்து, காப்பு கட்டினர். தொடர்ந்து, நேற்று காலை, கரும்பு தோரணம் அமைத்து, மண் பானைகளில் பொங்கலிட்டு கொண்டாடினர்.விவசாயத்துக்கு உறுதுணையாக இருக்கும், சூரியனுக்கும் அதுசார்ந்த இயற்கைக்கும் நன்றி செலுத்தும் வகையில் இயற்கையை வழிபட்டனர்.கடந்த ஆண்டு, பருவமழைகள் பெய்து விவசாயம் செழிப்படைந்தது. அதே போன்று, இந்த ஆண்டு ஆடிப்பட்டமும், தைப்பட்டமும் கைகொடுத்து, விவசாயம் செழிக்க வேண்டும் என வழிபாடு நடத்தினர். அனைத்து பகுதிகளிலும், கொண்டாட்டங்களும், வழிபாடுகளும், கோலாகலமாக நடந்தது.அமராவதி ஆயக்கட்டு பகுதியில், அறுவடைக்கு தயாராக உள்ள நெற்கதிர்களின் முன், பொங்கல் பானைகளை வைத்து வணங்கினர். நகரப்பகுதியில், பொங்கலையொட்டி, கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.அனைத்து பகுதிகளிலும், நடந்த சிறப்பு பூஜைகளில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். மார்கழி மாத இரவுகளில், கிராமங்களில் பழக்கப்படுத்தப்பட்ட சலகெருதுகளுக்கு நேற்று காலை சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.இந்நிலையில், விவசாயத்துக்கும், உழவுக்கும் உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் மாட்டுப்பொங்கல், பொள்ளாச்சி, உடுமலை பகுதியில் இன்று உற்சாகத்துடன் கொண்டாடப்பட உள்ளது.விளைநிலங்களில், மூங்கிலால் ஆன தடுப்புகளை கட்டி, மையப்பகுதியில் சிறிய தெப்பக்குளம் அமைத்து, அதில் நீர் நிரப்பி, மூலிகை செடிகள் மற்றும் கரும்பால் தோரணம் அமைப்பார்கள்.காளை, கறவை மாடு, ஆடு ஆகியவற்றை, நீர்நிலைகளில் குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் தீட்டுவார்கள். அலங்கரிக்கப்பட்ட கால்நடைகளை பட்டி எனப்படும் பகுதியில் நிறுத்தி, பொங்கல் வைப்பார்கள். அதன்பின், நாட்டுப்புற பாடல்களை பாடி, கால்நடைகளை வழிபட்டு, அவற்றுக்கு பொங்கல் ஊட்டுவர்.மாட்டு பொங்கல் கொண்டாட்டத்துக்காக, கிராமங்களில் நேற்றே பணிகள் தீவிரமாக நடந்தன. மழையால் நிலத்தடி நீர் மட்டம் உயர, வரும் பட்டங்களில் சாகுபடி செழிக்கும் என்ற நம்பிக்கையோடு, பொங்கல் வழிபாடு கிராமங்களில் களைகட்டியுள்ளது.