மகிழ்ச்சி பொங்க தொழிலாளர் பயணம்
திருப்பூர்: தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், திருப்பூரில் உள்ள தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு டூவீலர், வாடகை வாகனங்கள், பஸ்கள் மூலம் சென்று வருகின்றனர். 'டாலர் சிட்டி'யான திருப்பூரில், வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களை சேர்ந்தவர்கள், பின்னலாடை மற்றும் சார் நிறுவனங்களில் தொழிலாளர்களாகப் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் குடும்பத்தினருடன் இங்கு வசிக்கின்றனர். தீபாவளியையொட்டி, பின்னலாடை நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு போனஸ் பட்டுவாடா செய்யப்பட்டது. தீபாவளி, நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். திருப்பூரில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மத்திய பஸ் ஸ்டாண்ட், புதிய பஸ் ஸ்டாண்ட் மற்றும் கோவில்வழியில் இருந்து மக்கள் குடும்பம், குடும்பமாக பஸ்களில் நேற்று செல்லத் துவங்கினர். ரயில்வே ஸ்டேஷனில் வழக்கத்தை விட, பயணிகள் கூட்டம் அதிகம் இருந்தது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், மக்கள் சீராக நடந்து செல்ல குமரன் ரோட்டில் தடுப்பு ஏற்படுத்தப்பட்டது. இதுதவிர முக்கிய ரோடுகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டது. பஸ் ஸ்டாண்டுகளில் மக்கள் முண்டியடித்து கொண்டு பஸ் ஏறாமல், வரிசையில் நின்று ஏறவும் போலீசார் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பண்டிகையொட்டி, மாநகர், புறநகர் என, மாவட்டம் முழுதும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆங்காங்கே வாடகை கார், வேன் போன்றவற்றிலும் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்கின்றனர். பஸ்களில் கூட்ட நெரிசலில் சிக்காமல் தவிர்க்க, டூவீலர்களில் குடும்பத்தினருடன் தாங்கள் 'ஷாப்பிங்' செய்த பொருட்களுடன் மகிழ்ச்சி பொங்க செல்லும் தொழிலாளர்களும் அதிகளவில் உள்ளனர்.