சிரமம் இல்லாத பயணம்: உறுதிப்படுத்த எதிர்பார்ப்பு!
திருப்பூர்; 'அனுமதிக்கப்பட்ட பஸ் நிறுத்தங்களில் கூட, தனியார் பஸ் ஓட்டுனர்கள் நிறுத்த மறுப்பது, விதிகளுக்கு முரணாணது' என, நுகர்வோர் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. திருப்பூர், பூண்டி, அவிநாசி, தெக்கலுார், கரும்மத்தப்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் மற்றும் பொது மக்கள், தங்கள் பள்ளி, கல்லுாரி மற்றும் அரசு, தனியார் துறை பணியின் மித்தம் தினமும், கோவை சென்று வருகின்றனர். திருமுருகன்பூண்டி, அவிநாசி ஆகிய இடங்களில், 'பீக் அவர்ஸ்' எனப்படும் காலை, 7:00 முதல், 9:00 மணி வரை பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. குறிப்பாக, அவிநாசி பஸ் ஸ்டாண்டில் பஸ்சுக்காக மாணவ, மாணவியர், பொதுமக்கள் அலைமோதுவர். திருப்பூர் மட்டுமின்றி சேலம், ஈரோடு உள்ளிட்ட இடங்களில் இருந்து கோவை செல்லும் பஸ்களும், அவிநாசி வந்து செல்லும்; இருப்பினும், அங்கிருந்தே நிரம்பி வழியும் கூட்டத்துடன் வரும் பஸ்களில், மாணவ, மாணவியர், பொது மக்களால் ஏறி செல்ல முடிவதில்லை. உள்ளூர் பயணமும் அவதி!
இப்பிரச்னை ஒரு புறமிருக்க திருப்பூர், ஈரோடு, சேலத்தில் இருந்து கோவை வரும் பஸ்களில், அவிநாசி, தெக்கலுார் செல்ல வேண்டிய பயணிகளை தவிர்க்கின்றனர். அவிநாசி - சேவூர் வழித்தடத்தில், 10 நிமிடத்துக்கு ஒரு பஸ் இயக்கப்படும் என்று சொல்கின்றனர். ஆனால், '30 நிமிடத்துக்கு மேல் காத்திருந்தாலும், பஸ் வருவதில்லை' என்கின்றனர் பயணிகள். குறிப்பிட்ட நேரத்தில் ஒன்றன் பின் ஒன்றாக, வால் பிடித்தபடி, பஸ்கள் வரிசையாக வருவதும், அதன் பின் ஒரு மணி நேரம் காத்திருந்தாலும் பஸ்கள் வராமல் இருப்பதுமே இதற்கு காரணம்.
ஆய்வு நடத்த வேண்டும்
பொதுமக்கள் நலன் சார்ந்து, பல்வேறு அரசுத்துறை அதிகாரிகளிடம் நாங்கள் முன்வைக்கும் கோரிக்கை பெரும்பாலும் ஏற்கப்படுகிறது. அந்த வகையில், திருப்பூர் - அவிநாசி ரோட்டில், பூண்டி டைடட் நியோ பகுதியில், பயணிகளை ஏற்றி இறக்கி செல்ல பஸ் ஸ்டாப் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. அங்குள்ள அரசின் அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் உள்ளிட்ட சுற்றுப்புறங்களில் உள்ள மக்கள் பயன் பெறுகின்றனர். ஆனால், பஸ் ஓட்டுனர்கள் இங்கு பஸ்களை நிறுத்துவதில்லை என பயணிகள் புகார் கூறினர். சங்கத்தின் ஆலோசகர் பத்மநாபன், உண்மை நிலையை அறிய தனியார் பஸ்சில் பயணித்தார். குறிப்பிட்ட பஸ் ஸ்டாப்பில் நிறுத்த கூறியும், நடத்துனர் நிறுத்தவில்லை. 'அங்கு பஸ் நிறுத்தினால் 'டைமிங்' போதாது' என்று கூறியுள்ளார். இது, மோட்டார் வாகன சட்டப்படி விதிமீறல். இதில், வட்டார போக்குவரத்து அலுவலர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, பஸ்களின் பயண நேரத்தை ஆய்வுக்கு உட்படுத்தி, பயணிகளின் சிரமம் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும். -- காதர்பாஷா கன்ஸ்யூமர் கேர் அசோசியேஷன் தலைவர்