சுகாதார நிலையம் அகற்றம்; புதிதாக கட்ட எதிர்பார்ப்பு
பல்லடம்; பல்லடம் அருகே பழுதான சுகாதார நிலைய கட்டடம் இடித்து அகற்றப்பட்டது. புதிய கட்டடம் கட்ட வேண்டுமென, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.பல்லடம் ஒன்றியம், பனிக்கம்பட்டி ஊராட்சி, ரங்கசமுத்திரம் கிராமத்தில், 1996ல் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம், மிகவும் பழுதாகி சிதிலமடைந்தது. இதனால், செவிலியர் தங்கும் வீடாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது.மிகவும் மோசமான நிலையில் சேதம் அடைந்த இந்த கட்டடத்தால் விபத்து அபாயம் ஏற்பட்டு வருவதாக கூறப்பட்டது. இது குறித்து பல்லடம் தெற்கு ஒன்றிய பா.ஜ, சார்பில், சில மாதங்களுக்கு முன் புகார் மனு அனுப்பப்பட்டது.இதனால், பழுதடைந்த கட்டடம் இடிக்கப்பட்டது. பனிக்கம்பட்டி கிராமத்தில், 6 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். ஊராட்சியில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கிடையாது. அருகில் உள்ள புளியம்பட்டி அல்லது செம்மி பாளையம் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தான் செல்ல வேண்டும். இதனால், பொதுமக்கள், அவசர காலங்களில் சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.போதிய போக்குவரத்து வசதிகளும் இல்லாத நிலையில், சிகிச்சைக்காக பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, இடித்து அகற்றப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பதிலாக, புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்டி, உடனடியாக பயன்பாட்டுக்கும் கொண்டு வர வேண்டும் என, பா.ஜ., சார்பில் வலியுறுத்தப்பட்டது.