மேலும் செய்திகள்
'பேசு பொருள்' ஆன குப்பை விவகாரம்
13-Jun-2025
திருப்பூர் : திருப்பூரில் வளர்ந்து வரும் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப, சுகாதார பிரச்னைக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டிய நெருக்கடி, திருப்பூர் மாநகராட்சி உள்ளிட்ட ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. ரோட்டரி உள்ளிட்ட தன்னார்வ அமைப்பினர், உதவிக் கரம் நீட்டுவதாக அறிவித்து வருவது, நம்பிக்கையை ஏற்படுத்திஇருக்கிறது.திருப்பூர் மாநகராட்சி மற்றும் ஊரகப்பகுதிகளில், முழுபலன் தராத திடக்கழிவு மேலாண்மை திட்டத்தால், வீடு, வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் இருந்து சேகரிக்கப்படும் குப்பையை அப்புறப் படுத்துவது, அவற்றை மறு சுழற்சிக்கு பயன்படுத்துவது உள்ளிட்ட பணிகளில் தொய்வு நீடிக்கிறது.திருப்பூர் மாநகராட்சியை பொறுத்தவரை, குப்பைக்கொட்ட இடமில்லாததால், காலியாக உள்ள பாறைக்குழிகளை தேடிச் செல்ல வேண்டிய நிலை தொடர் கதையாக இருக்கிறது; பாறைக்குழியில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்துவது தொடர்கதையாக உள்ளது.திருப்பூரை பொறுத்தவரை தொழில் வளர்ச்சி, மரக்கன்று நட்டு வளர்ப்பது, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில், தங்களின் பங்களிப்பை வழங்கி வரும் ரோட்டரி சங்கங்கள் மற்றும் பல்வேறு தொழில் அமைப்பினர், திருப்பூரின் சுகாதாரப் பிரச்னையின் விபரீதத்தை உணரத்துவங்கியிருக்கின்றனர்.இம்மாதத்தின் துவக்கம் முதல், ஆங்காங்கே உள்ள ரோட்டரி சங்கத்தினரின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடத்தப்பட்டு வருகிறது. இதில், திருப்பூரின் சுகதாரம் காக்கவும், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை வெற்றிகரமாக மாற்றுவதற்குரிய திட்டத்தை, மாநகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட அரசுத்துறைகளுடன் இணைந்து மேற்கொள்வது, என தீர்மானம் நிறைவேற்றி வருகின்றனர். இத்தகைய அமைப்புகள், 'மெகா' திட்டங்களுக்கு நிதிப்பங்களிப்பு வழங்க தயங்குவதில்லை என்ற நிலையில், திருப்பூரின் சுகாதாரம் காக்கவும் உறுதிபூண்டிருப்பது, நம்பிக்கையை ஏற்படுத்துவதாக உள்ளது. தொழில்நுட்ப திட்டம்
திருப்பூர் மாநகராட்சி சார்பில், மாணிக்கா புரத்தில், குப்பையில் இருந்து பயோ காஸ் தயாரிப்பு கூடம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு, அப்பகுதியில் உள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மக்களின் கோரிக்கைக்கு மதிப்பளிக்க வேண்டிய அதே நேரம், மாநகராட்சியில் கொட்டப்படும் குப்பைகளை வேறெந்த வழியில் அப்புறப்படுத்த முடியும் என்பதையும் சிந்திக்க வேண்டும். பெரும்பாலான நகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் பயோ காஸ் திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் நிலையில், திருப்பூரில் அதை வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டியதன் அவசியம்; அதனால் ஏற்படும் நன்மை உள்ளிட்டவற்றை தொழில்நுட்ப மற்றும் அறிவியல் ரீதியாக மக்களிடம் விளக்க வேண்டிய பொறுப்பும் மாநகராட்சிக்கு உண்டு.எனவே, திருப்பூர் மாநகராட்சி சார்பில் தினசரி சேகரிக்கப்படும், 700 டன் குப்பை மற்றும் ஊரக பகுதிகளில் குவியும், பல நுாறு டன் குப்பையை உரிய முறையில் அகற்றி, குப்பையில்லா திருப்பூர் என்ற நிலையை எட்டுவதற்கான திட்டத்தை, சட்டசபை தேர்தல் அறிவிப்புக்கு முன் நடை முறைக்கு கொண்டு வர வேண்டும்.இது, திருப்பூரின் எதிர்கால நலன் சார்ந்தது என்பதை உணர வேண்டும்.
13-Jun-2025