உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உடுமலையில் கனமழை; விளைநிலங்களில் தண்ணீர்.. பூலாங்கிணரில் 93 மி.மீ. பதிவு

உடுமலையில் கனமழை; விளைநிலங்களில் தண்ணீர்.. பூலாங்கிணரில் 93 மி.மீ. பதிவு

உடுமலை சுற்றுப்பகுதிகளில் நீண்ட நாட்களுக்கு பின் நேற்று முன்தினம் கன மழை பெய்துள்ளது. பூலாங்கிணரில், 93 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில், மூன்று மாதங்களுக்கு பின் நேற்று முன்தினம் பரவலாக அனைத்து பகுதிகளிலும் மழை பெய்தது. நீண்ட நாட்களுக்கு பின், பரவலாக ஒரளவு மழை கிடைத்துள்ளதால், குளிர்சீதோஷ்ண நிலை ஏற்பட்டுள்ளது. கிராமங்களிலுள்ள ஓடைகளுக்கு நீர் வரத்து அதிகரித்த நிலையில், வறண்டு காணப்பட்ட குளம், குட்டைகளுக்கு குறைந்தளவு நீர்வரத்து காணப்பட்டது. வட கிழக்கு பருவ மழை கூடுதலாக கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் காத்திருக்கின்றனர். நகரில் பாதிப்பு உடுமலை நகர பகுதியில் நேற்று முன்தினம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கச்சேரி வீதியிலுள்ள தாலுகா அலுவலக வளாகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில், மழை நீர் வெளியேறும் கட்டமைப்புகள் இல்லாத நிலையில், பல அடி உயரத்திற்கு நீர் தேங்கியது. தீயணைப்பு துறையினர் வந்து, நீரை அகற்றினர். இதே போல், பிரதான ரோடுகளில் பல இடங்களிலும், நேதாஜி மைதானத்திலும், மழை நீர் வெளியேற வழியின்றி தேங்கியுள்ளது. ரோடுகளில் மழை நீர் தேங்குவதை தடுக்க, பிரதான ரோடுகளிலுள்ள மழை நீர் வடிகால் ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி முழுமையாக அகற்றவும், அரசு அலுவலகங்கள், அரசு பள்ளிகளில் மழை நீர் வெளியேறும் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். வால்பாறை வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் கடந்த ஒரு வாரமாக பரவலாக சாரல்மழை பெய்கிறது. சீதோஷ்ண நிலை மாற்றத்தால் காலை, மாலை நேரங்களில் கடும் பனிமூட்டமும் நிலவுகிறது. பரவலாக பெய்யும் மழையை சுற்றுலா பயணியர் ரசித்து செல்கின்றனர். தற்போது, ஆற்றில் மிதமான அளவே நீர்வரத்து இருப்பதால், சிறுகுன்றா கூழாங்கல் ஆற்றில் சுற்றுலா பயணியர் குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 157.84 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 261 கனஅடி தண்ணீர் வரத்தும், 454 கனஅடி தண்ணீர் வீதம் வெளியேற்றமும் இருந்தது. நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு (மி.மீ.,): சோலையாறு - 38, பரம்பிக்குளம் - 7, ஆழியாறு - 5, வால்பாறை - 11, மேல்நீராறு - 3, காடம்பாறை - 2, மேல்ஆழியாறு - 28, துாணக்கடவு - 3, உடுமலை - 71, மடத்துக்குளம் - 20, குமரலிங்கம் - 6, திருமூர்த்தி அணை - 12, அமராவதி அணை - 5, நல்லாறு - 72, பெதப்பம்பட்டி - 75, பூலாங்கிணர் - 93, கோமங்கலம் புதுார் - 28 என்ற அளவில் மழை பெய்தது. - நிருபர் குழு -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை