உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  குப்பையில்லா மாநகராட்சி உருவாக ஐகோர்ட் வழிகாட்டுதல் நல்வாய்ப்பு

 குப்பையில்லா மாநகராட்சி உருவாக ஐகோர்ட் வழிகாட்டுதல் நல்வாய்ப்பு

திருப்பூர், டிச. 11- திருப்பூர் மாநகராட்சி சார்பில் முதலிபாளையம் பாறைக்குழியில் குப்பை கொட்டப்பட்டு வந்தது. 'அதற்கு தடைவிதிக்க வேண்டும்' என, திருப்பூர் சுற்றுச்சூழல் குழு சார்பில் வேலுசாமி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார். பலமுறை நடந்த விசாரணையை தொடர்ந்து, இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.வேலுசாமி கூறியதாவது: திருப்பூர் மாநகராட்சியில், திடக்கழிவு மேலாண்மை சட்டம், 2016, முறைப்படி கடைபிடிக்க வேண்டும். குப்பையை தரம் பிரித்து வாங்கி, அந்த வார்டுகளிலேயே அவற்றை தரம் பிரித்து மக்கும் குப்பையில் உரம் தயாரிப்பது; மக்காத குப்பையை மறுசுழற்சிக்கு அனுப்பி வைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வழிகாட்டுதல் வழங்க வேண்டும்.'முதலிபாளையம் பாறைக்குழியில் குப்பை கொட்டக்கூடாது' என சுட்டிக்காட்டியுள்ள ஐகோர்ட், 'குப்பை கொட்ட தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட இடத்தில் கூட, தரம் பிரிக்கப்பட்ட குப்பையை தான் கொட்ட வேண்டும்' என வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.குப்பையில்லா மாநகராட்சியாக திருப்பூரை மாற்ற, ஐகோர்ட் வழிகாட்டுதல் நல்லதொரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கிது. குப்பை பிரச்னையை சமாளிக்க வேண்டிய பொறுப்பில் உள்ள மேயர், கமிஷனர் ஆகியோர், தன்னார்வ அமைப்பினர், சூழலியல் செயற்பாட்டாளர்கள், ரோட்டரி, லயன்ஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரை ஒருங்கிணைத்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது துவங்கி, கழிவு மேலாண்மை பணிகள் வரை முன்னெடுத்தால், குப்பை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண முடியும்.இவ்வாறு, அவர் கூறினார். --- அகற்றப்படாமல் தேங்கியுள்ள குப்பைகள். இடம்: மணியகாரம்பாளையம். -- வேலுசாமி பொன்னுசாமி முதல்வர் தலையிடுவாரா? மங்கலம் கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நலச் சங்க தலைவர் பொன்னுசாமி, முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பிய கடிதம்: இடுவாய் கிராமம், சின்னக்காளிபாளையத்திலுள்ள, தர்மதாயம் வகையை சேர்ந்த, 7 ஏக்கர் நிலம், இனாம் ஒழிப்பு சட்ட விதிகளுக்கு புறம்பாக, 1968ல், திருப்பூர் மாநகராட்சிக்கு வழங்கப்பட்டது. இங்கு தர்ம காரியங்கள் செய்யாமல், குப்பைகளை கொட்டி, நிலம், நீர், காற்று மாசுபடுத்த மாநகராட்சி நிர்வாகம் முயற்சிக்கிறது. அருகிலேயே, விவசாய நிலம், மக்கள் குடியிருப்புகள் நிறைந்துள்ளன. குப்பை கொட்டினால், நிலத்தடி நீர் மாசுபடும்; சுற்றுப்பகுதிகளில் பொதுமக்கள் குடியிருக்க முடியாத நிலை ஏற்படும். விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். இடுவாய், வேலம்பாளையம் கிராமசபா கூட்டங்களில், குப்பை கொட்டுவதற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டும் மீறி, இப்பணிகள் நடக்கின்றன. இங்கு மாநகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதை நிறுத்த ஆவன செய்யவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ