நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முற்றுகை: பா.ஜ. தீர்மானம்
அவிநாசி: அவிநாசி நகராட்சி பகுதியில் மிக மோசமாக உள்ள நெடுஞ்சாலை துறை ரோடுகளை சீரமைக்காவிட்டால், முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என பா.ஜ. அறிவித்துள்ளது. அவிநாசி நகர பா.ஜ. அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நகர தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். அவிநாசி கிழக்கு, வடக்கு மற்றும் சேவூர் ரோட்டில் சிந்தாமணி வரை மிக அதிகளவில் குண்டும் குழியுமாக உள்ள சாலையால் நாள்தோறும் பொதுமக்கள் பாதிப்படைகின்றனர். சேவூர் பிரதான ரோட்டில் பல மாதங்களாக பல்வேறு பணிகளுக்காக ரோட்டின் இருபுறமும் தோண்டப்பட்டு அரைகுறையாக மூடப்பட்டுள்ளது. இதனால் நாள்தோறும் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே, அடிப்படையில் நெடுஞ்சாலை துறையினர் சீரமைத்து தர வேண்டும். மழைக் காலம் துவங்கி உள்ளதால் அனைத்து குழிகளிலும் தண்ணீர் தேங்கி நிற்கின்றது. இது தெரியாமல் வரும் வாகன ஓட்டிகள் குழிக்குள் விழுந்து காயம் அடைகின்றனர். அவிநாசி கிழக்கு, வடக்கு மற்றும் சேவூர் ரோட்டை உடனடியாக சீரமைக்க வேண்டும். இல்லாவிடில், நெடுஞ்சாலை துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.