குறைந்தபட்சம் 20 மாணவர் இருந்தாலே இல்லம் தேடி கல்வி திட்ட மையம்
திருப்பூர்; குறைந்தபட்சம், 20 மாணவ, மாணவியர் இருந்தால் மட்டும், 'இல்லம் தேடி கல்வி' திட்ட மையம் செயல்படுத்தப்பட உள்ளது.கடந்த, 2021 கொரோனா கால கட்டத்தில், பள்ளி தொடர் விடுமுறையால், ஆசிரியர் - மாணவர் இடையே ஏற்பட்ட கற்றல் இடைவெளியை குறைக்க, 'இல்லம் தேடி கல்வி' திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. பள்ளி அல்லது பள்ளி அருகேயுள்ள வீடுகளை மையமாக்கி, குழந்தைகளுக்கு ஆரம்ப கல்வி கற்றுத்தந்ததுடன், ஆடல், பாடல், நாடகம், பொம்மலாட்டம் என அடுத்தடுத்த கற்பித்தலும் துவங்கியது; மாநிலம் முழுதும், 2.10 லட்சம் தன்னார்வலர்கள் இணைந்து, மாணவர்களுக்கு பாடம் கற்பித்தனர். பாடநுால், எழுதுபொருள், உபகரணங்களை கல்வித்துறை வழங்கியது.கடந்தாண்டு இறுதியில், அதிகளவில் மாணவர் கொண்ட, தொடர்ந்து வகுப்புகளை நடத்திய குறிப்பிட்ட சில தன்னார்வலர்களை கொண்ட குழு, ஒவ்வொரு மாவட்டத்திலும் உருவாக்கப்பட்டது; இவர்களுக்கு மட்டும் மாத சம்பளம், உபகரணம் அனுப்பி வைக்கப்பட்டது.புதிய கல்வியாண்டு துவங்கி, இரு வாரம் கடந்த நிலையில், தன்னார்வலர்களுக்கு மையங்களை திறப்பது, வகுப்புகளை துவங்குவது குறித்த அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை.கல்வித்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, 'கடந்த ஓராண்டு செயல்பாடுகள் ஆராயப்பட்டத்தில், தன்னார்வலர்களில் சிலர் ஆக்கபூர்வமாக பணியாற்றினாலும், சிலர் வகுப்புகள் நடத்தாமல் பழைய போட்டோக்களையே செயலியில் பதிவேற்றம் செய்ததும், வகுப்புகளை தொடர்ந்து நடத்தாததும் தெரிய வந்துள்ளது.அத்தகைய தன்னார்வலர்களை விடுவித்து விட்டு, 'இல்லம் தேடி கல்வி' திட்டம் - 3.0 விரைவில் வரவிருக்கிறது. இதில் இடம் பெறும் தன்னார்வலர்கள், 20 மாணவ, மாணவியரை கொண்டு வகுப்பு நடத்த வேண்டும். எக்காரணம் கொண்டு எண்ணிக்கை குறையக்கூடாது என, அறிவுறுத்தப்பட உள்ளது' என்றனர்.