உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தோட்டக்கலை பயிர் சாகுபடி; மதிப்பீட்டாய்வு அலுவலர்களுக்கு பயிற்சி

தோட்டக்கலை பயிர் சாகுபடி; மதிப்பீட்டாய்வு அலுவலர்களுக்கு பயிற்சி

உடுமலை; திருப்பூர் மாவட்டத்தில், நடப்பாண்டு ராபி பருவத்தில், 224 கிராமங்களிலும், காரீப் பருவத்தில், 72 கிராமங்களிலும் வேளாண், தோட்டக்கலை பயிர் சாகுபடி மற்றும் அறுவடை மதிப்பீட்டாய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. இது தொடர்பாக அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பொது பயிர் மதிப்பீட்டாய்வு திட்டத்தில், ஆண்டுதோறும், அந்தந்த மாவட்டங்களில் சாகுபடி செய்யப்படும் வேளாண், தோட்டக்கலை பயயிர்களின், பயிர் அறுவடை பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு ஆய்வு பயிர்களுக்கும், சுழற்சி முறையில் சாகுபடி நிலம் தேர்வு செய்யப்பட்டு, பயிர் சாகுபடி மற்றும் அறுவடை விபரங்களை உள்ளடக்கிய, மதிப்பீட்டாய்வு நடத்தப்படுகிறது. இதன் வாயிலாக, ஒவ்வொரு பயிர்களின் விளைச்சல், மொத்த உற்பத்தி விபரங்கள், மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் துல்லியமாக கணக்கிடப்படுகிறது. மாவட்டத்தின் வேளாண் வளர்ச்சி, தானிய உற்பத்தி, விவசாயிகளுக்கு தேவைப்படும் திட்டங்களை உருவாக்க இந்த ஆய்வுகள் கைகொடுக்கின்றன. பேரிடர் காலங்களின்போது பயிர்கள் பாதிக்கப்படும்போது, இழப்பீடு வழங்குவதற்கும் இது உதவுகிறது. திருப்பூர் மாவட்டத்தில், பொது மதிப்பீட்டாய்வு திட்டம் மற்றும் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில், நடப்பு 1435 பசலி ஆண்டுக்கான (2025- 26) காரீப் மற்றும் ராபி பயிர் அறுவடை பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. வேளாண், தோட்டக்கலை துறை அலுவலர்கள், 200 பேர் வரை இப்பணிகளில் ஈடுபட உள்ளனர். இவர்களுக்கு, மண்டலம் வாரியாக, பயிர் அறுவடை பரிசோதனை மேற்கொள்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது. உடுமலை, தாராபுரம் மண்டலங்களுக்குட்பட்ட ஒன்றிய பகுதிகளில் மதிப்பீட்டாய்வு களப்பணிகளில் ஈடுபட உள்ள வேளாண், தோட்டக்கலை அலுவலர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை