உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  ராபி பருவத்தில் தக்காளி, வெங்காயம் பயிர்க்காப்பீடு; விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை அழைப்பு

 ராபி பருவத்தில் தக்காளி, வெங்காயம் பயிர்க்காப்பீடு; விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை அழைப்பு

உடுமலை: மடத்துக்குளம் வட்டாரத்தில் ராபி பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள, தக்காளி, வெங்காயம் பயிர்களுக்கு காப்பீடு செய்து கொள்ள தோட்டக்கலை துறை அறிவுறுத்தியுள்ளது. மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் உமாசங்கரி கூறியதாவது : மடத்துக்குளம் வட்டாரத்தில், தோட்டக்கலை பயிர்களான தக்காளி, வெங்காயம் அதிக பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பயிர்களுக்கு இயற்கை இடர்பாடுகளால் ஏதேனும் சேதம் அடைந்தால், விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்கும் வகையில், பிரதம மந்திரியின் பயிர்க்காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பிர்கா அளவில் ஏற்படும் மகசூல் இழப்பு, விதைப்பு முதல் அறுவடை வரை உள்ள பயிர் காலத்திற்கு, அறுவடைக்குப் பின் ஏற்படும் இழப்பு, புயல், ஆலங்கட்டி மழை, மண்சரிவு, வெள்ளம் போன்ற உள்ளூர் இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் இழப்பீடுகளுக்கு, காப்பீடு பெற முடியும். கூட்டுறவு வங்கிகள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்களில் பயிர்க்காப்பீடு பதிவு செய்து கொள்ளலாம். நடப்பு ராபி பருவத்திற்கு தக்காளி, வெங்காயம் பயிரிட்டுள்ள மடத்துக்குளம், துங்காவி குறுவட்டத்தைச்சேர்ந்த வெங்காயம் பயிரிட்டுள்ள விவசாயிகள், காப்பீட்டுத்திட்டத்தில் சேரலாம். ராபி பருவத்தில் காப்பீடு செய்ய கடைசி தேதி, வரும் 2026 ஜன., 31 ஆகும். காப்பீட்டு திட்டத்தில் மத்திய மாநில அரசுகள், 95 சதவீதம் தொகையும், விவசாயிகளின் பங்களிப்புத் தொகை, தக்காளி பயிருக்கு 5 சதவீதம், வெங்காயத்திற்கு 1.5 சதவீதம் ஆகும். வெங்காயம் பயிருக்கு, ஒரு ஏக்கருக்கு ரூ.649, தக்காளி பயிருக்கு ஒரு ஏக்கருக்கு, ரூ.1,583 பிரீமியம் தொகையாக செலுத்த வேண்டும். பயிர்க்காப்பீடு செய்து முழுமையான பாதிப்பு ஏற்பட்டால், வெங்காயம் பயிருக்கு ஒரு ஏக்கருக்கு 45 ஆயிரத்து 350, தக்காளி பயிருக்கு ஒரு ஏக்கருக்கு ரூ. 31 ஆயிரத்து 650 இழப்பீடு தொகையாக கிடைக்கும். இத்திட்டத்தின் கீழ் பயிர்க்காப்பீடு செய்துள்ள தனிப்பட்ட விவசாயிகளும், இயற்கை சீற்றத்தினால் பாதிப்பு ஏற்படும் போது, தங்களுக்கு தனிப்பட்ட முறையில் தக்காளி வெங்காயம் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படும் போதும், அதை உரிய வழிமுறையில் தகவல் தெரிவித்து, தனி நபர் விவசாயிகளும் இழப்பீட்டுத் தொகை பெற முடியும். இத்திட்டத்தின் கீழ் பயிர் காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள், முன்மொழிவு படிவம், பதிவு விண்ணப்பம், அடங்கல், விதைப்பு அறிக்கை, வங்கிப்புத்தக நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் காப்பீடு செய்து கொள்ளலாம். பங்களிப்பு கட்டணத்தை செலுத்தியதற்கான ரசீதை பெற்றுக் கொள்ள வேண்டும். உள்ளூர் பேரிடர் காரணமாக, பயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் கிராம நிர்வாக அலுவலருக்கும், வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலகத்திற்கும் தெரிவிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட தோட்டக்கலைத்துறை வருவாய்த்துறை மற்றும் காப்பீட்டு நிறுவன அலுவலர்கள் கூட்டாய்வு மேற்கொண்டு பயிர் சேதமதிப்பீட்டு அறிக்கை அளித்த பின்னர், இழப்பீட்டுத்தொகை சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்தால் விவசாயிகளுக்கு வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு, உதவி தோட்டக்கலை அலுவலர்கள் தாமோதரன் 96598 38787; பூவிகா தேவி 80720 09226 ; பபிதா 85250 25540 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். எனவே, தக்காளி, வெங்காயம் பயிரிட்டுள்ள விவசாயிகள் அனைவரும் பயிர் காப்பீடு செய்து, பயிர் சேதார இழப்பை தவிர்க்கலாம். இவ்வாறு, தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ