இடியும் வீடுகள்; அச்சத்தில் மக்கள்; கண்டுகொள்ளாத தமிழக அரசு
உடுமலை; 'திருமூர்த்திமலை மலைவாழ் மக்கள் குடியிருப்பில் இடிந்து விழும் வீடுகளில் அச்சத்துடன் வாழும் நிலைக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்,' என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை திருமூர்த்திமலையில், படகுத்துறை அருகே, மலைவாழ் மக்களுக்கு கடந்த 1984ல், 120 வீடுகள் அரசால் கட்டித்தரப்பட்டது. படிப்படியாக சில திட்டங்களின் கீழ், புதிய வீடுகள் கட்டப்பட்டு, குடியிருப்பு விரிவானது.ஆனால், முன்பு கட்டப்பட்ட வீடுகள் போதிய பராமரிப்பின்றி இடிந்து வருகிறது. ஒவ்வொரு மழை சீசனின் போதும், வீடுகள் இடிவது தொடர்கதையாக உள்ளது.சிறு வன பொருட்கள் சேகரிப்பு வாயிலாக கிடைக்கும், குறைந்த வருவாயை கொண்டு வாழ்ந்து வரும் அப்பகுதி மக்கள், வீடுகளை புதுப்பிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். வலுவிழந்த வீடுகளில், அச்சத்துடன் வசிக்கும் நிலைக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என, நீண்ட காலமாக அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது அப்பகுதி தளி பேரூராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளதால், பேரூராட்சி சிறப்பு திட்டம் வாயிலாக வீடுகளை புதுப்பித்து தர வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.