இ.எஸ்.ஐ., மருத்துவமனை பயன்பாடு எப்படி? விரிவான ஆய்வுக்கு எதிர்பார்ப்பு
திருப்பூர்; 'தகுதியுள்ள தொழிலாளர்கள் அனைவருக் கும் இ.எஸ்.ஐ., திட்டத்தின் பயன் சென்றடைய வேண்டும்' என்ற கோரிக்கை வலுத்துள்ளது.இ.எஸ்.ஐ., எனப்படும் மாநில காப்பீடு நிறுவனம் வாயிலாக, தொழிலாளர்களுக்கு மருத்துவ வசதி செய்து கொடுக்கப்படுகிறது. அதன்படி, மாதம், 21 ஆயிரம் ரூபாய்க்குள் சம்பளம் வாங்கும் தொழிலாளர்கள், இ.எஸ்.ஐ., திட்டத்தின் கீழ் இணையும் தகுதியை பெறுகின்றனர். இதில், 3.75 சதவீதம் தொகை நிறுவனங்களின் பங்களிப்பு; எஞ்சிய தொகை, தொழிலாளர்களின் பங்களிப்பாக இருக்க வேண்டும் என்பது விதி. மேம்பட்ட சிகிச்சை
தொழிலாளர் நலன் கருதி, ஒவ்வொரு மாவட்ட அளவிலும் இ.எஸ்.ஐ., மருத்துவமனை அமைக்க, மத்திய, மாநில அரசுகள் ஆர்வம் காட்டி வருகின்றன. குறிப்பாக, தொழிலாளர்கள் அதிகம் நிறைந்த திருப்பூர், கோவை உள்ளிட்ட இடங்களில் இ.எஸ்.ஐ., மருத்துவமனையின் தேவை அதிகம்.இம்மருத்துவமனைகளில் மருத்துவ பரிசோதனை துவங்கி, அறுவை சிகிச்சை வரை மேற்கொள் ளப்படுகிறது; மருந்து, மாத்திரைகளும் வழங்கப்படுகின்றன. இது, தொழிலாளர்களின் மருத்துவ செலவினத்தை பெருமளவு குறைக்க உதவுகிறது. இருப்பினும், பெரும்பாலான தொழில் நிறுவனங்கள், தங்கள் தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ., சலுகை வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.நாம் தமிழர் கட்சி பின்னலாடை மற்றும் நுாற்பாலை தொழிலாளர்கள் சங்க மாநில இணை செயலர் சுரேஷ்பாபு கூறியதாவது:திருப்பூர் உள்ளிட்ட தொழில் நகரங்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள், இ.எஸ்.ஐ., திட்டத்தின் கீழ் தகுதி பெறுகின்றனர். குறைந்த சம்பளம் வாங்கும் தொழிலாளர்களுக்கு மருத்துவ செலவு என்பது, அவர்களின் பொருளாதாரத்தை வெகுவாக பாதிக்கிறது.இருப்பினும், பெரும்பாலான தொழில் நிறுவனங்கள், தகுதியுள்ள தொழிலாளர்களை கூட இ.எஸ்.ஐ., திட்டத்தில் இணைக்காமல் உள்ளன.உடல் நலக்குறைவு உள்ளிட்ட நோய் பாதிப்பின் போது, பெரும் தொகையை கடன் வாங்கியோ அல்லது தங்கள் நகைகளை அடகு வைத்து அதன் வாயிலாக திரட்டப்படும் பணத்தில் தான் சிகிச்சை மேற்கொள்கின்றனர்.எனவே, ஒவ்வொரு தொழில் நிறுவனங்களையும் ஆய்வுக்கு உட்படுத்தி, தகுதியுள்ள தொழிலாளர்கள், இ.எஸ்.ஐ., திட்டத்தில் இணைக்கப்பட்டுள் ளனரா என்பதை, தொழிலாளர் துறை உறுதிப்படுத்த வேண்டும். அவ்வாறு, இணைக்காத நிறுவனங்களுக்கு உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.பஸ் வசதி கேட்டு எம்.எல்.ஏ., மனுதிருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.,விஜயகுமார், அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனருக்கு அனுப்பிய மனு:திருமுருகன்பூண்டி ரிங் ரோட்டில் 6 லட்சம் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் பயன்பெறும் வகையில் இ.எஸ்.ஐ மருத்துவமனை செயல்படுகிறது. ஆனால், மருத்துவமனைக்கு வந்து செல்ல பஸ் வசதி இல்லாததால், சிரம நிலை உள்ளது. ரிங் ரோட்டில் பல கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளன. பல்வேறு குடியிருப்புகள் நெசவாளர் நிறைந்த பகுதியாகவும் உள்ளது.மருத்துவமனைக்கு தொழிலாளர்கள் வந்து செல்ல உடனடியாக குறிப்பிட்ட நேர இடைவெளியில் நான்கு பஸ்கள் இயக்க வேண்டி உள்ளது.ஒன்று திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து, பூலுவபட்டி, ரிங் ரோடு, இ.எஸ்.ஐ மருத்துவமனை, திருமுருகன்பூண்டி, அணைப்புதுார் வழியாக அவிநாசிக்கும்; மற்றொன்று திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து குமார் நகர், அனுப்பர்பாளையம், திருமுருகன்பூண்டி, ரிங் ரோடு, ஏ.வி.பி காலேஜ், இ.எஸ்.ஐ., மருத்துவமனை, பூலுவபட்டி, பாண்டியன் நகர், வழியாக பெருமாநல்லுாருக்கும் இயக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.