எதுவரை பட்டம்? எப்போது பறவை? மாணவர்கள் புரிந்தால் சிறக்கலாம்
திருப்பூர்; ''நல்ல பணிக்கு செல் லும் வரை பட்டமாகவும், பிறகு பறவையாகவும் மாணவர்கள் மாறலாம்'' என்றார் முனைவர் ஜெயந்தஸ்ரீ.'நிப்ட்-டீ' கல்லுாரியில், முதலாம் ஆண்டு மாணவ, மாணவியரை வரவேற்கும், 'பிரஷ்ஷர்ஸ் டே - 2025-26' நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிர்வாக தலைவர் மோகன் வரவேற்றார்.கல்லுாரி தலைமை ஆலோசகர் ராஜா சண்முகம், துணை தலைவர் பழனிசாமி, 'அகாடமிக்' தலைவர் மோகன் குமார், உறுப்பினர் கந்தசாமி, கல்லுாரி முதல்வர் கோபாலகிருஷ்ணன், 'அடல் இன்குபேஷன்' மைய தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பேராசிரியர் முனைவர் ஜெயந்தஸ்ரீ பேசியதாவது:பெற்றோர், குழந்தைகளின் படிப்புக்கான செலவுகளை, செலவு என்று நினைக்கக்கூடாது; அது, மூலதனம் என்று நிரூபிப்பதை போல் நன்றாக படிக்க வேண்டும். பட்டமாக வேண்டுமா; பறவையாக பறக்கலாமா என்று மாணவ, மாணவியர் மனதில் தோன்றும்.படிப்பை முடித்து, நல்ல பணிக்கு செல்லும் வரை, ஆசிரியர்கள், பெற்றோரின் வழிகாட்டுதலுடன் பட்டமாகத்தான் இருக்க வேண்டும்; பிறகு பறவையாக உயர பறக்கலாம். தனித்துவத்தை உணர்ந்தவனே தன்னிகரில்லா வெற்றி பெற முடியும். படிப்பில் முழு கவனம் செலுத்துங்கள்; எதிர்பார்த்தது அனைத்தும் தானாக வந்துசேரும்.இவ்வாறு, அவர் கூறினார்.