தென்னை மட்டைகளை உரமாக்கும் முறை; கழிவுகள் வீணாவது தவிர்ப்பு
உடுமலை; தோப்புகளில் வீணாகும் கழிவுகளை உரமாக்கும் வகையில், மட்டைகளை துாளாக்கி பயன்படுத்தும் முறையை, உடுமலை வட்டார விவசாயிகள் பின்பற்றுகின்றனர்.உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில், பிரதான சாகுபடியாக தென்னை உள்ளது. தென்னந்தோப்புகளில், நீர் மற்றும் உர மேலாண்மையுடன் கழிவுகளையும் முறையாக அகற்றுவது மரங்கள் பராமரிப்பில், முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.முன்பு, தென்னை மட்டைகளை குவியலாக போட்டு, தீ வைத்து எரிக்கும் முறையை விவசாயிகள் பின்பற்றினர். இதனால், பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது.இதையடுத்து, ஓலைகளை பிரித்து விட்டு, மட்டைகளை மட்டும் எரிபொருள் தேவைக்காக விற்பனை செய்து வந்தனர். இதிலும் குறைந்த விலையே மட்டைகளுக்கு கிடைத்தது.தற்போது, தென்னை மரங்கள் மற்றும் தோப்பில் பெறப்படும் இதர கழிவுகளையும் உரமாக்கும் முறையை பின்பற்ற துவங்கியுள்ளனர்.விவசாயிகள் கூறியதாவது:மண் வளத்தை பெருக்கும் வகையில், மட்டை, ஓலை, பாளை என தென்னை மரத்தில் இருந்து பெறப்படும் அனைத்தையும் உரமாக்கி பயன்படுத்துகிறோம். குறிப்பாக, மட்டைகளை தென்னை மரங்களுக்கு இடையே நீளமாக போட்டு குவித்து வைக்கிறோம்.குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை, டிராக்டரில் பொருத்தி இயக்கப்படும் 'மல்சர்' இயந்திரம் வாயிலாக, மட்டைகள் துாளாக்கப்படுகிறது. இந்த துாளை தென்னந்தோப்பு முழுவதும் அல்லது மரங்களின் வட்டப்பாத்திகளில் கொட்டி வைக்கிறோம்.தென்னை நார் போல துாள் மாறி விடுவதால், தண்ணீரை சேகரித்து ஈரப்பதம் குறையாமல் பார்த்துக்கொள்கிறது; தென்னை மரங்களுக்கு இடையே களைகள் முளைப்பதும் குறைகிறது.மண்ணுக்கும் தேவையான கரிம உரம் கிடைக்கிறது. மட்டைகளை துாளாக்கும் இயந்திரத்தை வேளாண் பொறியியல் துறை வாயிலாக, குறைந்த வாடகைக்கு கிடைக்க செய்தால் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு, தெரிவித்தனர்.