உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / காண்டாமிருக வண்டு அழிப்பது எப்படி? தென்னை விவசாயிகளுக்கு அட்வைஸ்

காண்டாமிருக வண்டு அழிப்பது எப்படி? தென்னை விவசாயிகளுக்கு அட்வைஸ்

உடுமலை; கோடை காலத்தில் ஏக்கருக்கு இரண்டு விளக்கு பொறிகளை தென்னந்தோப்புகளில் வைத்து, காண்டாமிருக வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம் என தோட்டக்கலைத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில் தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. இச்சாகுபடியில், பல்வேறு நோய்த்தாக்குதல் ஏற்பட்டு மரங்கள் பாதிக்கின்றன.இதில், காண்டாமிருக வண்டுகளை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து தோட்டக்கலைத்துறையினர் விவசாயிகளுக்கு வழிகாட்டுதல் வழங்கியுள்ளனர்.அத்துறையினர் கூறியதாவது: காண்டாமிருக வண்டுகள் இளம் மற்றும் வளரும் கன்றுகளை அதிகளவு தாக்கும். விரியாத மட்டைகள், குருத்துப்பகுதி, அடிமட்டை, பாளைகள் ஆகியவற்றில் துளைகள் காணப்படும்.தாக்கப்பட்ட ஓலைகள் விரிந்தவுடன் முக்கோண வடிவில் வெட்டியது போல இருக்கும். சேதமடைந்த பகுதியில் மரச்சக்கைகள் காணப்படும். அதிகளவில் பாதிக்கப்பட்ட மரங்களின் குருத்து வளைந்தும், சுருண்டும் காணப்படும்.எருக்குழியில் காணப்படும் புழுக்கள் மற்றும் கூட்டுப்புழுக்களை சேகரித்து அழிக்க வேண்டும்; ஒரு கிலோ மெட்டாரைசியம் பூஞ்சாணத்தை தண்ணீரில் கரைத்து, எருக்குழியில் ஊற்றலாம்.வேப்பங்கொட்டை துாள், 50 கிராம், நுாறு கிராம் காய்ந்த மணலுடன் அல்லது 'குளோராண்ட்ரானிலிபுரோல்' குருணை மருந்து, 250 கிராமை காய்ந்த மணலுடன் கலந்து நடுக்குருத்து பகுதியில் துாவி விட வேண்டும்.ரைனோலியூர் கவர்ச்சி பொறிகளை ெஹக்டேருக்கு ஒன்று வீதம் வைத்து காண்டாமிருக வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம்.கவர்ச்சி பொறிகளை தென்னை மரத்திலோ அல்லது ஓலைகளிலோ கட்டி வைப்பதை தவிர்க்க வேண்டும். இப்பொறிகளை தென்னந்தோப்பில் வயல் வரப்பு ஓரங்களில் இரும்பு அல்லது மரக்கட்டையில், 6 அடி உயரத்தில் கட்டி தொங்க விட வேண்டும்.கவர்ச்சி பொறிகளில் விழும் வண்டுகளை உடனடியாக அழித்து விட வேண்டும். மரத்தின் குருத்து பாகத்தில் வண்டுகள் சேதப்படுத்திய துளைகளில் கம்பியை உள் செலுத்தி காண்டாமிருக வண்டுகளை வெளியே எடுத்து அழித்து விட வேண்டும்.ஆமணக்கு புண்ணாக்கு ஒரு கிலோ; ஈஸ்ட் 15 கிராம், அசிட்டிக் அமிலம் 5 மில்லி ஆகியவற்றை 5 லிட்டர் தண்ணீருடன் கலந்து பானைகளில் ஏக்கருக்கு 30 வீதம் வைத்து வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம்.கோடை மற்றும் மழைக்காலத்தில் இரவு நேரத்தில் விளக்கு பொறிகளை ஏக்கருக்கு இரண்டு வீதம் வைத்து காண்டாமிருக வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம்.இவ்வாறு, அத்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை