உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அமெரிக்காவின் வரி உயர்வை சமாளிப்பது எப்படி? ஏற்றுமதியாளர்களுடன் மத்திய அரசு இன்று ஆலோசனை

அமெரிக்காவின் வரி உயர்வை சமாளிப்பது எப்படி? ஏற்றுமதியாளர்களுடன் மத்திய அரசு இன்று ஆலோசனை

திருப்பூர் : அமெரிக்காவின் இறக்குமதி வரி உயர்வுக்கு பின், அடுத்தகட்ட தொழில் பாதுகாப்பு குறித்து திட்டமிட ஏதுவாக, மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் இன்று ஏற்றுமதியாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.இந்தியாவின், ஒட்டு மொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தில், 14 சதவீத பங்களிப்புடன், அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. இறக்குமதி வரி, 16 சதவீதமாக இருந்ததை, அமெரிக்கா, கூடுதலாக, 26 சதவீதம் உயர்த்தியுள்ளது. இது, அந்நாட்டின் வர்த்தகர்கள் மற்றும் இந்திய உற்பத்தியாளருக்கு, பெரும் சவாலாக மாறியுள்ளது. இந்த வரி உயர்வு, சில மாதங்களுக்கு பின்னரே, உலக சந்தைகளில் எதிரொலிக்கும் என, வர்த்தகர்கள் கணக்கிட்டுள்ளனர். மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், 26 சதவீத வரி உயர்வு பரவாயில்லை என்ற மனநிலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, 'பரஸ்பரம்' வரிவிதிப்பு என்று, அமெரிக்க அழுத்தமாக குறிப்பிட்டுள்ளதால், இந்தியாவில் அமெரிக்க பொருட்களுக்கான வரியை குறைத்தால், ஏற்றுமதியாகும் ஆடைகளுக்கான வரியும் குறைய வாய்ப்புள்ளது.போட்டி நாடுகளுக்கான வரியும் உயர்ந்துள்ளது, இந்தியாவுக்கு வரும் காலங்களில் புதிய வளர்ச்சிக்கு வழிகாட்டுவதாக இருக்கும். இருப்பினும், தற்போதைய குழப்பத்தை தீர்க்க மத்திய அரசு உதவ வேண்டும் என, அனைவரும் எதிர்பார்க்கின்றனர். திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியில், 40 சதவீதம் ஆடைகள், அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகின்றன; 14 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதி, திடீர் வரி உயர்வால், நேரடியாக பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல், பரஸ்பரம் வரிவிதிப்பு தொடர்பாக, இன்று, நாடுமுழுவதும் உள்ள ஏற்றுமதியாளர்களுடன் கலந்தாய்வு நடத்த உள்ளார். 'ஆன்லைன்' வாயிலாக நடக்கும் ஆலோசனையின் வாயிலாக, வரி உயர்வால் ஏற்படும் பிரச்னைகள் மற்றும் பின்னலாடை தொழில் பாதுகாப்புக்கான வழிமுறைகள் குறித்து, அமைச்சரிடம் முறையிட, ஏற்றுமதியாளரகள் தயாராக உள்ளனர்.

10 சதவீதம் மானியம் வழங்கணும்!

----------------------------தெற்கு ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவுக்கு, 26 சதவீதம் வரி என்பது ஆறுதலாக இருக்கிறது. இதன் வாயிலாக, எதிர்காலத்தில் ஆர்டர் நமக்கு கூடுதலாக வர வாய்ப்புள்ளது. இருப்பினும், தற்போதைய நெருக்கடி நிலையை கடந்து செல்ல, மத்திய அரசின் உதவி அவசியம் தேவை. வரி உயர்வால், அமெரிக்க வர்த்தகர்கள், ஆடை விலையை குறைத்து வழங்குமாறு வலியுறுத்துகின்றனர்.ஆனால், கடும் நஷ்டம் ஏற்படுமென, விளக்கம் அளித்து வருகிறோம். இதனால், வர்த்தக உறவு பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இலையுதிர்காலம் மற்றும் குளிர்கால ஆர்டர் மீதான உற்பத்தி நடந்து வருகிறது. மத்திய அரசு, அவசரகால அடிப்படையில், கைவசம் உள்ள ஆர்டர்களுக்கு மட்டும், 10 சதவீதம் வரை சிறப்பு மானியம் வழங்கி உதவ வேண்டும். அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை நாம் குறைப்பதுடன், ஆயத்த ஆடைக்கான வரியை குறைக்குமாறு அமெரிக்காவை வலியுறுத்தலாம். மத்திய அமைச்சரிடம் இதுகுறித்து கோரிக்கை வைக்கப்படும். - சுப்பிரமணியன்திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை