உபயதாரர் தீக்குளிக்க முயற்சி அவிநாசியில் பெரும் பரபரப்பு
அவிநாசி : அவிநாசி ஒன்றியம், வேலாயுதம்பாளையம் ஊராட்சியில், ஆகாசராயர் கோவில் உள்ளது. தற்போது 24 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேக திருப்பணி, ஒன்றரை ஆண்டுகளாக நடந்து வருகிறது.கோவில் வளாகத்தில் சில கட்டுமானங்கள், ஆகமவிதிகள்படி நடக்கவில்லை என்று பக்தர்கள் சிலர் குற்றம்சாட்டினர். மேலும், கும்பாபிஷேக திருப்பணிகளில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்று முறையிட்டு வந்தனர். இதன் தொடர்ச்சியாக, கடந்த வாரம், செயல் அலுவலர் சரண்யாவை முற்றுகையிட்டு, கோரிக்கை விடுத்தனர்.இதனால், தாசில்தார் தலைமையில் முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்தி, திருப்பணி வேலைகளை துவங்கிக் கொள்ள முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று உள் பிரகார வேலைகளில் அலங்கார வளைவு பணிகள் மற்றும் இதர வேலைகள் செய்ய பூஜைகள் நடைபெற்றது. இதனையறிந்த வெளிப்பிரகார அலங்கார வளைவு திருப்பணிகளை செய்து வரும் உபயதாரர் சந்திரசேகரன் என்பவர், தான் செய்து வரும் பணிகளையும் அனுமதிக்க வேண்டும் எனக் கூறி கோவிலின் முன்பு பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள், உடனே அவர் மீது தண்ணீரை ஊற்றி தடுத்து சமாதானம் செய்தனர். இதனால், கோவில் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.செயல் அலுவலர் சரண்யா கூறுகையில், ''திருப்பணிகள் துவங்கியது குறித்து அறிந்த சந்திரசேகரன் என்பவர் தான் செய்து வரும் அலங்கார வளைவு பணிகளையும் செய்ய அனுமதி கேட்டார்.எந்த பணிகளாக இருந்தாலும் தாசில்தார் முன்னிலையில் பேச்சு நடத்தி துவக்கிக் கொள்ளலாம் என கூறி இருந்தேன். அவர் பெற்றோர் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. அவர் கோவில் வெளிப்பிரகாரத்தில், இந்த செயலை செய்துள்ளார்,'' என்றார்.