தினமும் சூறாவளி; போலீசுக்கு வலி
திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில் கொலை சம்பவங்கள் தொடர் கதையாகியுள்ளன. கடந்த அக்., 29ம் தேதி, பல்லடம் அருகே சேமலைக்கவுண்டம்பாளையத்தில் தந்தை, தாய், மகன் ஆகிய மூவர் கொல்லப்பட்டு, நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. கணியாம்பூண்டி பகுதியில் நேற்றுமுன்தினம் தாயைக் கொன்று மகன் தற்கொலை செய்துகொண்டார். நேற்று பழங்கரை பகுதியில் கஞ்சா விற்றதாக சந்தேகத்தின் படி, வாலிபர் ஒருவரை கட்டிவைத்து ஒரு கும்பல் தாக்கியது. அவிநாசியில் நேற்று வாக்கிங் சென்ற நபர் கொல்லப்பட்டுள்ளார்.தொடர் சம்பவங்களால் பொதுமக்கள் பீதியடைந்துள்ள அதேசமயம், போலீசாரோ குற்றவாளிகளைக் கண்டறிய இயலாமல் திணறி வருகின்றனர்.மாவட்டத்தில் மக்கள் கூடும் இடம், பிரதான ரோடு, முக்கிய சந்திப்பு உள்ளிட்ட போலீசார் இரவு நேரங்களில் தீவிர வாகன தணிக்கை, சந்தேகப்படுபவர்களின் நடமாட்டம் குறித்து அறிய குடியிருப்பில் ரோந்து பணியை போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். ஓட்டல், தங்கும் விடுதி போன்றவற்றிலும் சந்தேக நபர்கள் தங்கியுள்ளனரா என்றும் ஆய்வு செய்து வருகின்றனர்.சோதனைச்சாவடிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.