தொழில் நகரங்களை இணைக்க மெமு ரயில்கள் இயக்க யோசனை
திருப்பூர்: திருப்பூர் ரைசிங் உரிமையாளர்கள் சங்க தலைவர் ராமசாமி கூறியதாவது: எதிர்கால வளர்ச்சிக்காக, திருப்பூருக்கு பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் தேவைப்படுகின்றன. சரக்குகளை, துறைமுகங்களுக்கு கொண்டு செல்லவும், வெளிமாநிலங்கள் எடுத்துச்செல்லவும் ரோடு வசதி வேண்டும். திருப்பூரில் உள்ள வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட தொழிலாளர்களுக்கு, பாதுகாப்பான குடியிருப்பு வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். வெளிமாநில தொழிலாளருக்கு பாதுகாப்பான தங்குமிட வசதி வேண்டும். திருப்பூருக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான வர்த்தகர்கள், பொதுமக்கள், தொழில் முனைவோர் ரயில்கள் மூலம் மட்டும், வந்து செல்கின்றனர். பெண்கள், முதியவர்கள், நெரிசலால் பாதிக்கப்படுகின்றனர். சேலம், ஈரோடு, தாராபுரம், கோவை, மேட்டுப்பாளையம், அவிநாசி பகுதிகளுடன், திருப்பூரை இணைக்கும் வகையில், புதிய 'மெமு' ரயில் வசதி தேவை. பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், தொழிலாளர் என, பல்லாயிரக்கணக்கான மக்கள் 'மெமு' ரயில் திட்டத்தால் பயன்பெறுவர்; தொழில் நகரங்கள் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.