மனுக்களை மதித்தால் மக்களுக்கு குறையேதும் இல்லை
திருப்பூர்:மாவட்ட அளவிலான பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் மனிஷ் நாரணவரே, மக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். மனுக்கள் மீது, உரிய நடவடிக்கை எடுப் பதற்காக, துறை சார்ந்த அரசு அலுவலர்களிடம் சேர்க்கப்பட்டது. மதுக்கடையை இடம் மாற்றுங்கள் நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் கிஷோர் குமார் அளித்த மனு: குன்னத்துார் - பெருந்துறை ரோட்டில், காமராஜர் சிலைக்கு எதிரே, டாஸ்மாக் மதுக்கடை மற்றும் பார் செயல்படுகிறது. அருகிலேயே பஸ்ஸ்டாண்ட், தனியார் மருத்துவமனை, கோவில் இருப்பதால், மதுக்கடையை கடந்து செல்ல பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. போதை ஆசாமிகள் காலி பாட்டில்களை, காமராஜர் சிலை அருகே வீசிச்செல்கின்றனர். காமராஜர் சிலை எதிரே உள்ள மதுக்கடையை, இடமாற்றம் செய்யவேண்டும். குன்னத்துாரில் புதிதாக கட்டப்பட்டு வரும் பஸ் ஸ்டாண்டுக்கு காமராஜர் பெயர் சூட்டவேண்டும். கோவில் கட்ட அனுமதி தேவை திருப்பூர் - தாராபுரம் ரோடு, கே.செட்டிபாளையம் ஸ்ரீ நகர் - 1 குடியிருப்போர் நலச் சங்கத்தினர் அளித்த மனு: கே.செட்டிபாளையம், பூங்கா நகரிலுள்ள ஸ்ரீ நகர் குடியிருப்பில், 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகிறோம். வீட்டுமனைக்கு ஒதுக்கப்பட்ட 80 சென்ட் ரிசர்வ் சைட் உள்ளது. 5 சென்ட் இடத்தில் கோவில் கட்ட முடிவு செய்து, நீதி திரட்டினோம். கட்டுமான பணிகள் துவங்கி, நிறைவடைய உள்ளது; அடுத்த மாதம் கும்பாபிஷேகம் நடக்க உள்ள நிலையில், அருகாமை தோட்டத்து உரிமையாளர் ஒருவர், கோவில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துவருகிறார். கலெக்டர் தலையிட்டு, கோவில் கட்டுவதற்கு அனுமதி அளிக்கவேண்டும். ஆளும் கட்சியினர் 'மாமூல்' வசூல் பா.ஜ., திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் கார்த்திக் அளித்த மனு: திருப்பூரில், யுனிவர்சல் தியேட்டர் ரோடு, ஸ்ரீ சக்தி தியேட்டர் ரோடு, யூனியன் மில் ரோடு, பழைய கோர்ட் வீதி ஆகிய பகுதிகள் போக்குவரத்து மிகுந்த சாலைகளாக உள்ளன. இப்பகுதிகளில் ஆளும் கட்சியினர் தினசரி மாமூல் பெற்றுக்கொண்டு, போக்குவரத்துக்கு இடையூறாக, ரோட்டோரம் கடை அமைக்க அனுமதி அளிக்கின்றனர். ஆக்கிரமிப்பு கடைகளை அப்புறப்படுத்தி மக்களின் சிரமத்தை போக்கவேண்டும். சிறப்பு கிராம சபா நடத்த வேண்டும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க பல்லடம் ஒன்றிய இளைஞரணி செயலாளர் செல்வராஜ் அளித்த மனு: பல்லடம் ஒன்றியம், இச்சிப்பட்டி ஊராட்சியில் கடந்த 11ம் தேதி நடத்தப்பட்ட கிராமசபாவில் பொதுமக்கள் பங்கேற்றனர். ஆனால், துறை சார்ந்த அரசு அதிகாரிகள் பங்கேற்கவில்லை. ஊராட்சி செயலர், வேலைக்கு சரியாக வருவதில்லை. மக்களின் புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. ஊராட்சியில் எந்த பணியும் சரிவர நடப்பதில்லை. இதையெல்லாம் கண்டித்து, கிராமசபாவை மக்கள் அனைவரும் புறக்கணித்தோம். ஆகவே எங்கள் கிராமத்துக்கு உடனடியாக சிறப்பு கிராமசபா கூட்டம் நடத்தப்பட வேண்டும். நெட்வொர்க் பிரச்னை கிராமங்களுக்கு சிக்கல் விவசாயி மலரவன் அளித்த மனு: ஜல்லிப்பட்டி, வாவிபாளையம், காசிலிங்கம்பாளையம் பகுதிகளில், தகவல் தொலை தொடர்பு சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், வர்த்தக நிறுவனங்கள், பள்ளி மாணவர்கள் உள்பட அனைவரும் தகவல் பரிமாற்றத்துக்கும், இணையதளங்களை பயன்படுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர். நெட்வொர்க் பிரச்னைகளை சரி செய்யவேண்டும். முகாமில், பொதுமக்களிடமிருந்து மொத்தம் 355 மனுக்கள் பெறப்பட்டன.