அமராவதி பாசனத்தில் சட்ட விரோத நீர் திருட்டு: தடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்
உடுமலை: அமராவதி ஆறு, கால்வாய்களில் சட்ட விரோத நீர் திருட்டை தடுக்க வேண்டும், என விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், மடத்துக்குளம் தாலுகா மாநாடு நடந்தது. ராஜரத்தினம் தலைமை வகித்தார். மனோகரன் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் பாலதண்டபாணி துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் குமார், தாலுகா செயலாளர் வீரப்பன், தென்னை விவசாயிகள் சங்க தலைவர் தயானந்தன், செயலாளர் சிவராஜ், இயற்கை விவசாயி கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதில், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்க, அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அமராவதி பாசனத்தில் பெரும்பகுதி நீரை, முறைகேடாக அதிகாரிகள் துணையுடன், மின்மோட்டார் வைத்து ஆயக்கட்டு இல்லாத பகுதிகளுக்கு, தண்ணீர் திருடப்படுவதை தடுக்க வேண்டும். மடத்துக்குளம் தாலுகாவில், வி.ஏ.ஓ.,க்கள் முறையாக பணியில் இருப்பதை உறுதி செய்யவும், நில அளவை துறையில் நடக்கும், லஞ்சம், முறைகேடுகளை தடுக்க வேண்டும். அமராவதி ஆறு, பிரதான கால்வாய், பழைய ஆயக்கட்டு, ராஜவாய்க்கால்களில், சங்கராமநல்லூர், குமரலிங்கம், மடத்துக்குளம், கணியூர் பேரூராட்சிகள் மற்றும் வழியோர கிராமங்களிலிருந்து சாக்கடை கழிவு நீர் நேரடியாக கலப்பதை தடுக்கவும், நீர் நிலைகளின் கரைகளில் கழிவுகள் கொட்டுவதை தடுக்க வேண்டும். ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. தாலுகா தலைவராக வெள்ளியங்கிரி, செயலாளராக வீரப்பன், பொருளாளராக நித்தியானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய் யப்பட்டனர்.