உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கால்வாய் பாதையை மேம்படுத்துங்க!

கால்வாய் பாதையை மேம்படுத்துங்க!

உடுமலை: சேறும், சகதியுமாக காணப்படும் கால்வாய் பாதையை மேம்படுத்த வேண்டும் என, ஒன்றிய அதிகாரிகளிடம் மா.கம்யூ., சார்பில், மனு கொடுத்தனர். உடுமலை குரல்குட்டையில் இருந்து அரசு கலைக்கல்லுாரி வரை, பி.ஏ.பி., கால்வாய் கரையில் பாதை அமைந்துள்ளது. இப்பாதையை குரல்குட்டை, மடத்துார், ஆலாம்பாளையம், குருவப்பநாயக்கனுார் உள்ளிட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இப்பாதை தற்போது சேறும், சகதியுமாக மாறி விட்டது. இதனால், இந்த பாதையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. அப்பகுதி மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது குறித்து, உடுமலை ஒன்றிய அதிகாரிகளிடம், மா.கம்யூ., கட்சியினர் கொடுத்த மனு: கால்வாய் கரையில் அமைந்துள்ள பாதையை பல கிராம மக்கள், விவசாயிகள் அரசுக்கல்லுாரி, பள்ளி மாணவ, மாணவியர் வேலைக்கு செல்வோர் என, ஏராளமானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இப்பாதை மிக மோசமாக மாறிவிட்டது. எனவே குரல்குட்டை இணைப்பு ரோட்டில் இருந்து, எலையமுத்தூர் ரோடு கால்வாய் பாலம் வரை சுமார், 350 மீ., அளவுக்கு தார்சாலை அமைத்துக்கொடுக்க சம்பந்தப்பட்ட துறைகளோடு பேசி உடனடியாக தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இது குறித்து குரல்குட்டை கிராம சபைக்கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பி.ஏ.பி., செயற்பொறியாளர் அலுவலகத்திலும், இதே கோரிக்கையை வலியுறுத்தி, மனு கொடுத்தனர். மா.கம்யூ., மாவட்ட செயற்குழு உறுப்பினர் கனகராஜ், குரல்குட்டை கிளைச்செயலாளர் தட்சிணாமூர்த்தி, மகேந்திரன் உள்ளிட்டோர் மனு கொடுத்தனர். இந்த பாதையை சீரமைக்க, உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை