உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இனாம் நில விவசாயிகள் ஆலோசனை கூட்டம்

இனாம் நில விவசாயிகள் ஆலோசனை கூட்டம்

பல்லடம்; இனாம் ஒழிப்பு சட்டத்தின் கீழ், பட்டா கொடுக்கப்பட்ட மற்றும் பட்டா கொடுக்காமல் விடுபட்ட நிலங்களை பூஜ்ஜிய மதிப்பு இடுமாறு, பத்திர பதிவுத்துறைக்கு ஹிந்து அறநிலையத்துறை கடிதம் கொடுத்துள்ளது. இதனை கண்டித்து, பல்லடம் ஒன்றியம், அல்லாளபுரம் கிராமத்தில், இனாம் நில விவசாயிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். அதில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் ஈசன் முருகசாமி தலைமை வைத்து பேசியதாவது: இனாம் ஒழிப்பு சட்டத்தின் கீழ், பல்வேறு மாநிலங்களில், பட்டா வழங்க சட்ட சீர்திருத்தம் செய்யப்பட்டு, நில உரிமை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும், ஹிந்து அறநிலையத்துறை மற்றும் வக்பு வாரியம் ஆகியவை, சொத்துக்களை பூஜ்ஜிய மதிப்பு செய்வது, பட்டாக்களை ரத்து செய்வது, சொத்துக்களை சட்ட விரோதமாக ஏலம் விடுவது உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றன. அரசின் துறையாக உள்ள அறநிலையத்துறை சட்ட விரோதமாக செயல்பட்டு வருகிறது. இவர்களே ஆட்களை வைத்து வழக்கு தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களை வழக்கில் சேர்க்காமல், ஒரு தலைபட்சமாக வழக்கு நடத்தி, தீர்ப்பையும் பெற்று விடுவார்கள். இதனை எதிர்த்து நாம் மனு தாக்கல் செய்தால், ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறி நம்மை வெளியேற்றி விடுவார்கள். காரணம், சட்ட புத்தகத்திலேயே இனாம் நிலம் குறித்த சரியான சட்ட விவரங்கள் இல்லை. இதுதொடர்பாக, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களையும் சந்தித்து இது குறித்து வலியுறுத்தியுள்ளோம். இனாம் நில விவகாரம் தொடர்பாக, குழு அமைத்து தீர்வு காண்பதாக, இன்றைய ஆட்சியாளர்கள் கூறினர். இதுவரை, எந்த குழுவும் அமைக்கவில்லை; தீர்வும் காணவில்லை. அரசிடமிருந்து இதற்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்றால், அரசியல், ஜாதி, மதம் ஆகியவற்றை கடந்து, நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். இனாம் நில விவசாயிகளை பாதுகாக்க, இதர மாநிலங்களைப் போன்று, சட்ட சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை