பால் உற்பத்திக்கு ஊக்கத்தொகை; தமிழக அரசு அறிவிப்பால் நிம்மதி
திருப்பூர் ; தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பால் உற்பத்தி கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகின்றன. இவற்றில் கொள்முதல் செய்யப்படும் பால், கூட்டுறவு பால் உற்பத்தி இணையம் மூலம் பதப்படுத்தி,விற்பனை செய்யப்படுகிறது. கடந்த, 2023 டிசம்பரில் பால் உற்பத்திக்கு லிட்டருக்கு 3 ரூபாய் ஊக்கத் தொகை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஜூலை முதல் நான்கு மாதங்களாக இந்த தொகை வழங்கப்படாமல் நிறுத்தப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்ட பால் உற்பத்தியாளர்கள் ஊக்கத்தொகை வழங்க அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தினர். இந்நிலையில், ஊக்கத் தொகையை விடுவிக்க நேற்று முன்தினம் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இது குறித்து, திருப்பூர் மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் கொளந்தசாமி, விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் குமார் ஆகியோர் கூறியதாவது:திருப்பூர் மாவட்டத்தில், 441 சங்கங்களில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் வாயிலாக தினமும், 1.80 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி வழங்கப்படுகிறது. பால் உற்பத்தியாளர்களுக்கு மூன்று மாதமும், சங்கங்களுக்கு நான்கு மாதமும் ஊக்கத் தொகை நிலுவையில் உள்ளது.இதனை விடுவிக்க உத்தரவிட்ட மாநில அரசுக்கு நன்றி. விலைவாசி உயர்வு காரணமாக பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு, 10 ரூபாய் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையையும் அரசு நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.