பனியன் நிறுவனங்களில் வருமான வரித்துறை ரெய்டு
திருப்பூர்; தொழில் நகரமான திருப்பூரில் ஆயிரக்கணக்கான பனியன் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. தீபாவளி பண்டிகை காலம் என்பதால், ஒட்டுமொத்த திருப்பூரே பரபரப்பாக இயங்கி வருகிறது. தீபாவளிக்கு இன்னும், 12 நாட்களே உள்ள நிலையில், பனியன் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அவ்வகையில், பிச்சாம்பாளையம்புதுார் பகுதி, 15 வேலம்பாளையம் அடுத்த தில்லைநகர் மற்றும் கணக்கம்பாளையத்தில் ஒரு பனியன் நிறுவனம் என மொத்தம் மூன்று நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். கோவையிலிருந்து மூன்று கார்களில் வந்த, 15 வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று மாலை முதல் சோதனை மேற்கொண்டனர். சோதனை முடிவில் தான், கணக்கில் காட்டப்படாத ரொக்கம் மற்றும் ஆவணங்கள் குறித்த விவரம் தெரியவரும் என்று அதிகாரிகள் கூறினர்.