திருப்பூர்:ஜல்லி, மணல் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் விலை இரட்டிப்பாகி உள்ளதால், ஊரக பகுதிகளில், வளர்ச்சி திட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.தமிழகம் முழுதும், ஜல்லி, எம் - சாண்ட், பி - சாண்ட் விலைகள் உயர்ந்து வருகின்றன. இது, அரசின் உள்கட்டமைப்பு பணிகளை டெண்டர் எடுத்துள்ள ஒப்பந்ததாரர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.கட்டுமான பொருட்கள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வால், ஊரக பகுதிகளில் நடைபெற்று வரும் உள்கட்டமைப்பு பணிகளின் வேகம் குறைய துவங்கியுள்ளது. கட்டுமான பொருட்கள் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை, ஒப்பந்ததாரர் மத்தியில் எழுந்துள்ளது.திருப்பூர் மாவட்ட அரசு ஒப்பந்ததாரர் சங்க மாவட்ட செயலர் சக்திவேல்முருகன் கூறியதாவது:ஜல்லி, மணல் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் விலை இரட்டிப்பாகியுள்ளது. யூனிட் 2,000 ரூபாயாக இருந்த எம்.சாண்ட் 4,000 ரூபாய்; 3,000 ரூபாயாக இருந்த பி.சாண்ட் 5,000 ரூபாய். 1,800 ரூபாயாக இருந்த ஒரு யூனிட் ஜல்லி 3,600 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி முகமை மூலம் 500 கோடி ரூபாய் மதிப்பில், உள்கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. கட்டுமான பொருட்கள் விலை உயர்வால், குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் திட்ட பணிகளை முடிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.ஏற்கனவே, டெண்டர் எடுத்த பணிகளிகளை, அதிக விலைக்கு கட்டுமான பொருட்கள் கொள்முதல் செய்து மேற்கொண்டால், பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடுகிறது.எனவே, ஊரக பகுதிகளில் தற்போது நடைபெற்று வரும் பணிகளுக்கான கட்டுமான பொருட்களை மட்டும், பழைய விலைக்கே வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.