உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சின்ன வெங்காய சாகுபடி அதிகரிப்பு

சின்ன வெங்காய சாகுபடி அதிகரிப்பு

திருப்பூர்: நல்ல விலை கிடைத்துவருவதால், திருப்பூர் சுற்றுப்பகுதிகளில் சின்ன வெங்காயம் சாகுபடி அதிகரித்துள்ளது.'சாம்பார்' வெங்காயம் சின்ன வெங்காயம், சமையலில் மிகவும் முக்கியமானது. பெரிய வெங்காயத்தை பயன்படுத்துவது அதிகம் நடந்தாலும், சுவையான சமையலுக்கு சின்ன வெங்காயம் மிகமிக அவசியம்.கடந்த ஓராண்டுக்கு மேலாக, சின்ன வெங்காயம் விலை, கிலோ 60 ரூபாயில் இருந்து குறையவே இல்லை. சில நேரங்களில், கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதன்காரணமாக, காய்கறி விவசாயிகள், சின்ன வெங்காயம் சாகுபடி செய்ய அதிகம் விரும்புகின்றனர்.விதை அல்லது விதை வெங்காயம் நடவு செய்த, 60 நாட்களில் அறுவடை செய்து கையில் காசு பார்க்கலாம் என்பது விவசாயிகளின் கருத்து. கடந்த சில மாதங்களாக, நல்ல விலை கிடைப்பதால் திருப்பூர் சுற்றுப்பகுதிகளில், சின்ன வெங்காயம் சாகுபடி அதிகரித்துள்ளது. ஒரு ஏக்கர் பரப்பில் வெங்காயம் பயிரிட, 50 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. நான்கு நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். நன்றாக விளைந்தால், ஏக்கருக்கு, 7000 கிலோ வரை வெங்காயம் கிடைக்கும். ஆறு நாட்கள் உலர்த்தி, இருப்பு வைத்து விற்கலாம்.திருப்பூர் சுற்றுப்பகுதிகளில், காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகள், அடிக்கடி சின்ன வெங்காயமும் சாகுபடி செய்வார்கள். சமீபமாக நல்ல விலை கிடைப்பதால், சின்ன வெங்காயம் அதிகம் சாகுபடி செய்து, பட்டறையில் இருப்பு வைத்து, விற்பனை செய்து வருகின்றனர்.கடந்த நவ., மாதம் நடவு செய்ததால், தற்போது நன்கு வளர்ந்துள்ளது; 60 நாட்களுக்கு பிறகு, வெங்காயத்தாள் வறண்டதும், வெங்காயம் அறுவடை துவக்கும். சின்ன வெங்காய வரத்து அதிகரிக்கும் போது, விலையில் சிறிய மாற்றம் உருவாக வாய்ப்புள்ளதாக, விவசாயிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி