புதுப்பிக்கப்படாத தளி கால்வாய் நீர் விரயம் அதிகரிப்பு
உடுமலை: நீண்ட காலமாக புதுப்பிக்கப்படாமல் இருப்பதால், தளி கால்வாயில், நீர் விரயம் அதிகரிப்பு உட்பட பல்வேறு பிரச்னைகள் தொடர்கதையாகியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து, ஏழு குள பாசன திட்டத்துக்குட்பட்ட குளங்களுக்கு, தளி கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்படுகிறது.மேலும், அணை அருகே, நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள கூட்டுக்குடிநீர் திட்டங்களும், இந்த கால்வாயை ஆதாரமாக கொண்டே செயல்படுத்தப்படுகிறது. இந்த கால்வாய் பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் உள்ளது.இதனால், கரைகள் இடிந்து பல இடங்களில் பரிதாப நிலையில் உள்ளது. தண்ணீர் திறப்புக்கு முன், புதர் மண்டி, கால்வாயை தேட வேண்டியுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.மேலும், கால்வாயில், திறக்கப்படும் தண்ணீர் குறிப்பிட்ட அளவு விரயம் ஆவதால், நீர் நிர்வாகத்தில் பாதிப்பு ஏற்படுவதாக, ஏழு குள பாசன திட்ட விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.சில ஆண்டுகளுக்கு முன், உலக வங்கி நிதியுதவியில், பி.ஏ.பி., திட்டத்துக்குட்பட்ட சில கால்வாய்கள் புதுப்பிக்கப்பட்டன.வறட்சியால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், பாசன கால்வாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.