ஆதார் புதுப்பித்தலுக்கு அதிகரிக்கும் மக்கள் கூட்டம் துணை தபால் நிலையங்களில் துவங்க வலியுறுத்தல்
திருப்பூர்; திருப்பூர் தலைமை தபால் அலுவலகத்தில் ஆதார் கார்டு புதுப்பித்தலுக்கு கூட்ட நெரிசல் தொடர்ந்து அதிகமாகி வருவதால், துணை தபால் நிலையங்களிலும் ஆதார் செயல்பாடுகளை துவங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.திருப்பூர் தலைமை தபால் அலுவலகத்தில் ஆதார் சேவை மையம் செயல்படுகிறது. புதிய ஆதார் பதிவு, போட்டோ, முகவரி மாற்றம், ஆதார் பயோமெட்ரிக் புதுப்பித்தல் உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ளப் படுகிறது. கோடை விடுமுறை முடிந்து, ஜூன், 2ல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், மகன், மகள் ஆதார் பயோமெட்ரிக் புதுப்பித்தல் பணிகளை முடிக்க பெற்றோருக்கு பள்ளி நிர்வாகங்கள் அறிவுறுத்தி வருகிறது.ஐந்து வயது முடிந்து ஆறு வயதை தொடும் பள்ளி குழந்தைகள், 15 வயது முடிந்து, 16 வயதை அடையும் மாணவ, மாணவியர் ஆதார் புதுப்பித்தல் கட்டாயம். எனவே, தலைமை தபால் அலுவலகத்துக்கு ஆதார் சார்ந்த அப்டேட்டுக்கு பெற்றோர், மாணவர்கள் உட்பட தினசரி, 80 - 120 பேர் வருகின்றனர். இதனால், 50 - 60 பேருக்கும் மட்டுமே ஆதார் சார்ந்த பணியை முடிக்க முடிகிறது.தலைமை தபால் அலுவலகத்தில் ஆதார் பணிகளுக்கு ஒரு அலுவலர், ஒரு ஊழியர் என இருவர் உள்ளனர். இதனால், ஒவ்வொருவருக்கும் பணிகளை முடிக்க, ஒரே நாளே ஆகி விடுகிறது; நீண்ட நேரம் காத்திருந்து, மறுநாள் வருபவர்களும் உள்ளனர். பள்ளி திறப்பு தேதி நெருங்குவதால், அடுத்த பத்து நாட்களுக்குள் ஆதார் புதுப்பித்தல் பணிகளை முடிக்க வேண்டும் என்பதால், தினசரி பெற்றோர் கூட்டம் அதிகமாகி கொண்டே இருக்கிறது. ஆதார் பணிகளுக்கு மாற்று ஏற்பாடுகளை செய்ய தலைமை தபால் அலுவலகம் முன்வர வேண்டும். கிளைகளிலும்துவங்கலாம்
திருப்பூர் தலைமை தபால் அலுவலகத்தின் கீழ் துணை தபால் நிலையங்களாக காந்திநகர், புதிய பஸ் ஸ்டாண்ட், காட்டன் மில் ரோடு உள்ளிட்ட இடங்களில் செயல்படுகிறது. நகரின் பல்வேறு பகுதியில் இருந்து தலைமை தபால் நிலையத்துக்கு அனைவரும் வந்து குவிவதால், காத்திருக்கும் நேரம் அதிகமாகிறது. வடக்கு, தெற்கு, மேற்கு பகுதியில் செயல்படும் துணை தபால் நிலையங்களில் ஆதார் மையம் செயல்பட போதிய வசதிகளும் உள்ளது. தபால் கண்காணிப்பாளர் முடிவெடுத்து செயல்படுத்தினால், பெற்றோர் பலரின் அலைச்சல் குறையும். ஆதார் அப்டேட் பணிகளையும் விரைந்து முடித்துக் கொடுக்க முடியும்.