நெல் சாகுபடியில் ஒருங்கிணைந்த உர மேலாண்மை; வேளாண்துறை அறிவுறுத்தல்
உடுமலை; மடத்துக்குளம் வட்டாரத்தில், நெல் சாகுபடியில் ஒருங்கிணைந்த உர மேலாண்மை குறித்து வேளாண் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.அமராவதி பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்தின் கீழ், மடத்துக்குளம் வட்டாரத்தில், 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், குறுவை நெல் சாகுபடியும், சம்பா பருவத்தில், 6 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.தற்போது, பழைய ஆயக்கட்டு பகுதி கிராமங்களான, கடத்துார், காரத்தொழுவு, கணியூர், சோழமாதேவி, குமரலிங்கம் பகுதிகளில், 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.நெல் சாகுபடி, நாற்று நடவு முறை, பாய் நாற்றங்கால் முறை, இயந்திர நடவு மற்றும் விதை தெளிப்பான் கொண்டு நேரடி நெல் விதைப்பு முறைகளை பின்பற்றி விவசாயிகள் சாகுபடி மேற்கொண்டு வருகின்றனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு
நெல் சாகுபடியில் ஒருங்கிணைந்த உர மேலாண்மை முறையை கடைபிடித்து பூச்சி நோய் தாக்குதலை கட்டுப்படுத்தி, அதிக மகசூல் பெற முடிவதோடு, சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுகிறது.பொதுவாக எந்த பயிர் சாகுபடி மற்றும் மண் மாதிரி முடிவுக்கு ஏற்ப, உரங்களை பயன்படுத்த வேண்டும்.தற்போது நெல் சாகுபடிக்கு, ஏக்கருக்கு 5 டன் தொழு உரம், அசோஸ்பைரில்லம், 500 மில்லி, பாஸ்போ பாக்டீரியா,, 500 மில்லி, வேப்பம்புண்ணாக்கு, 100 கிலோ, சல்பேட், 5 கிலோ, 120:40:40 வீதம், தழை, மணி, சாம்பல் சத்து தரக்கூடிய, 260 கிலோ சூப்பர் பாஸ்பேட், 220 கிலோ, பொட்டாஷ், 65 கிலோ நெல் நுண்ணுாட்டம், 5 கிலோ தேவைப்படுகிறது.தொழு உரத்தை, அடியுரமாகவும் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா ஆகியவற்றை, நெல் விதைப்பு, நாற்று நனைப்பு மற்றும் வயலில் தொழு உரத்துடன் கலந்து இட்டும், துத்தநாக சல்பேட், 5 கிலோவை நடவுக்கு முன்பு அடியுரமாகவும், நெல் நுண்ணுாட்ட சத்து, 5 கிலோவை, நடவுக்கு முன், அடியுரமாகவும் இட வேண்டும்.தழைச்சத்து உரமாக, யூரியா மற்றும் பொட்டாஷ் உரத்தினை, 4 சம பங்காக பிரித்து, அடியுரம், துார்கட்டும் பருவம், பூங்குருத்து உருவாகும் பருவம், கதிர் வெளிவரும் பருவம் ஆகிய நான்கு பருவத்தில் இட வேண்டும்.மணிச்சத்தை தரும், சூப்பர் பாஸ்பேட் அல்லது டி.ஏ.பி., அடியுரமாக மட்டுமே இட வேண்டும். மேலும், தழைச்சத்து உரத்தினை அதிகமாக பயன்படுத்தினால், பூச்சி நோய் தாக்கும் நிலை உள்ளதால், சிபாரிசு செய்யும் அளவு, பிரித்து அளிக்க வேண்டும்.சாம்பல் சத்து தரும் பொட்டாஷ், பூச்சி நோய் தாக்குதலுக்கு எதிர்ப்பு சக்தியை அளிக்கும் என்பதால், கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். மானியங்கள் இருக்கு
வேளாண் விரிவாக்க மையத்தின் வாயிலாக, நெல் சாகுபடி விவசாயிகளுக்கு நெல்நுண்ணுாட்டம், சிங்க் சல்பேட் ஆகியவை, 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. மேலும் நுண்ணுாட்ட உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஷ் பாக்டீரியா, சிங்க் பாக்டீரியா ஆகியவை மானியத்தில் வழங்கப்படுகிறது.நுண்ணுயிர் உரங்கள் ரசாயண உரத்தேவையை குறைக்கவும், பயிருக்கு எளிதில் சத்துக்கள் கிடைத்திடவும், நுண்ணுாட்ட சத்து குறைபாட்டினை தவிர்க்கவும் பயன்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு தேவையான நுண்ணுாட்ட உரங்கள், நுண்ணுயிர் உரங்கள் மடத்துக்குளம் வேளாண் விரிவாக்க மையத்திலும், குமரலிங்கம் துணை வேளாண் விரிவாக்க மையத்திலும் தேவையான அளவு இருப்பு உள்ளது.மானிய விலையில், விவசாயிகள் வாங்கி பயன்பெறுமாறு, மடத்துக்குளம் வேளாண் உதவி இயக்குனர் வசந்தா தெரிவித்துள்ளார்.