உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  விரைவு தபால் சேவைக்காக சர்வதேச முன்பதிவு மையம்

 விரைவு தபால் சேவைக்காக சர்வதேச முன்பதிவு மையம்

திருப்பூர்: திருப்பூர் காட்டன் மார்க்கெட் துணை தபால் நிலையத்தில் புதிதாக சர்வதேச முன்பதிவு மையம் துவங்கப்பட்டுள்ளது. திருப்பூர் கோட்ட தபால் துறை, சர்வதேச விரைவு தபால் மற்றும் பார்சல் சேவைகளை எளிதாக அணுகும் வகையில் காட்டன் மார்க்கெட் துணை தபால் நிலையத்தில் சர்வதேச முன்பதிவு மையத்தை துவங்கியுள்ளது. பின்னலாடை தலைநகரான திருப்பூரில் இருந்து அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட உலக நாடுகள் பலவற்றிற்கு பார்சல் மற்றும் ஆவணங்கள் அனுப்பும் ஏற்றுமதியாளர், தொழில் முனைவோரின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த மையம் செயல்படும். விரைவு தபால் சேவை (ஈ.எம்.எஸ்.), பதிவு செய்த விமான தபால், விமான பார்சல், சிறு பொட்டலங்கள் போன்ற அனைத்து தபால் சேவைகளையும் தபால் துறை நிர்ணயித்த கட்டணத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இங்கு பேக்கிங் உபகரணங்கள் கிடைக்கும். தபால் கோட்ட கண்காணிப்பாளர் பட்டாபிராமன் கூறியதாவது: சர்வதேச தபால் சேவைகளுக்காக பொதுமக்கள் நீண்ட துாரம் பயணிக்கும் சிரமத்தை குறைப்பதே இம்மையத்தின் முக்கிய நோக்கம். இங்கு சுங்க அறிவிப்பு படிவங்கள் பூர்த்தி செய்யவும், பார்சல் அனுப்பும் நடைமுறைகள் பற்றி தெரிந்து கொள்ளவும் சிறப்பு உதவியாளர் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், திருப்பூர் மற்றும் பல்லடம், மங்கலம், அவிநாசி பகுதி மக்களும் ஏற்றுமதியாளர்களும் இனி எளிதாக, விரைவாக தங்கள் சர்வதேச தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !