பி.ஏ.பி. வாய்க்கால் ஆக்கிரமிப்பா?
திருப்பூர்: திருப்பூர் அடுத்த முத்தணம்பாளையம் பகுதியில் பி.ஏ.பி. கிளை வாய்க்கால் உள்ளது. பிரதான வாய்க்காலில் இருந்து, ஜி.என். கார்டன் - புது ரோடு வழிப்பாதையில் இந்த வாய்க்கால் 1.5 கி.மீ.,கடந்து செல்கிறது. இதில் ஒரு இடத்தில் தனியார் ஒருவர் 300 மீ., நீளம், வாய்க்காலை முற்றிலும் மூடி ஆக்கிரமித்ததாக புகார் எழுந்தது. அப்பகுதி சமூக ஆர்வலர் மோகன் கூறியதாவது:வாய்க்கால் மீது மண் கொட்டி மூடி ஒரு பகுதியில் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. மற்றொரு பகுதியில் வணிக வளாகம் கட்டி, அதன் முன்புறம் வாய்க்காலை ஆக்கிரமித்து ெஷட் போடப்பட்டுள்ளது. ரோடு பத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்குச் செல்லும் பிரதான ரோடு. ரோட்டின் ஓரம் வாய்க்காலை ஆக்கிரமித்துள்ளனர். இந்த இடத்தில் இருந்த மின் கம்பங்களை மின் வாரியத்தினர் இடம் மாற்றி ரோட்டில் அமைத்துள்ளனர். இதனால் ரோடு பல அடி குறுகலாகி விட்டது. ஆளும் கட்சியினரின் அழுத்தம் காரணமாக அதிகாரிகள் தயக்கம் காட்டுகின்றனர். இதுகுறித்து ஆர்.டி.ஓ., விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. என்னிடமுள்ள ஆவணங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதற்கு தயாராக நான் சென்றேன். ஆனால், பி.ஏ.பி., நிர்வாகத் தரப்பில் யாரும் ஆஜராகவில்லை. அதிகாரிகள் தொடர்பு கொண்ட போது, கள ஆய்வுக்குச் சென்று விட்டதாகத் தெரிவித்தனர். மற்றொரு நாளில் மீண்டும் விசாரணைக்கு அழைப்பு அனுப்புவதாக ஆர்.டி.ஓ., தெரிவித்துள்ளார்.