உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விளையாட்டு திறன்களை மேம்படுத்த உபகரணம் போதுமா? கிராமங்களில் மாயமான மைதானங்கள்

விளையாட்டு திறன்களை மேம்படுத்த உபகரணம் போதுமா? கிராமங்களில் மாயமான மைதானங்கள்

உடுமலை; 'கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்' வழங்கும் திட்டத்தின் கீழ், ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது; ஆனால், மைதானங்கள் பராமரிப்பின்றி, புதர் மண்டி கிடப்பதால், அரசு திட்டம் பயனளிக்காத நிலை ஏற்பட்டுள்ளது.தமிழக அரசு கடந்தாண்டு, கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியது. ரூ.86 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மாநிலம் முழுவதும் உள்ள ஊராட்சிகளுக்கு, திட்டத்தின் கீழ், விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.இதில், வாலிபால், புட்பால், ஸ்கிப்பிங் போன்ற விளையாட்டு உடற்பயிற்சிக்கு தேவையானது உள்ளிட்ட, 33 உபகரணங்கள் இந்த தொகுப்பில், ஊராட்சி தோறும் வழங்கப்பட்டது.இதற்காக ஒன்றியங்களில் ஆளுங்கட்சியினர் தரப்பில், விழா நடத்தி, உபகரணங்கள் இளைஞர்களுக்கு வழங்கப்பட்டன. ஆனால், உபகரணங்களை பயன்படுத்தி விளையாட, எந்த கிராமத்திலும் உருப்படியான மைதானம் கிடையாது. உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றியங்களில், 72 ஊராட்சிகள் உள்ளன. கடந்த, 2006ல், தி.மு.க., ஆட்சிக்காலத்தில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், கிராம விளையாட்டு மைதானங்கள், மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.நிதியில், அடிப்படை உடற்பயிற்சிகள் செய்வதற்கான உபகரணங்கள், கபடி, வாலிபால் விளையாடுவதற்கான கட்டமைப்பு மற்றும் குழந்தைகளுக்கான சறுக்கு, ஊஞ்சல் உள்ளிட்ட உபகரணங்கள் அமைக்கப்பட்டது.மேலும், பல்வேறு விளையாட்டு சாதனங்களும், ஊராட்சி நிர்வாகத்தின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டது. மைதானங்கள் பராமரிப்புக்கும், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.இந்த திட்டம், சில ஆண்டுகள் செயல்பாட்டில் இருந்தது. அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில், மைதானங்கள் பராமரிப்பு குறித்து சில ஆண்டுகள் கண்டுகொள்ளப்படவில்லை. பின்னர், கடந்த, 2020ல், 'அம்மா' விளையாட்டு மேம்பாட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.இதில், கிராமந்தோறும் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மைதானங்கள் மேம்பாடு செய்யப்பட்டது.மேலும், விளையாட்டு இளைஞர் நலத்துறை சார்பில், 76 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தமிழகம் முழுவதும், கிராமப்புற மைதானங்களில், உபகரணங்கள் வாங்கி பொருத்தப்பட்டது.தன்னார்வலர்கள் வாயிலாக, பயிற்சி வழங்கப்பட்டு, கபடி, வாலிபால் குழுக்கள், கிராமந்தோறும், உருவாக்கப்பட்டு, வட்டார, மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்தப்படும்.அதிலிருந்து சிறப்பான வீரர்களை தேர்வு செய்து, மாநில அளவிலான அணிக்கு பயிற்சி கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், இத்திட்டமும், துவங்கிய வேகத்திலேயே முடங்கியது.தற்போது, அனைத்து கிராமங்களிலும், மைதானங்கள் பயன்பாடு இல்லாமல், புதர் மண்டி பரிதாப நிலையில் உள்ளது. ஆக்கிரமிப்பால் பல இடங்களில் மைதானமே இல்லாத நிலை உள்ளது.

அரசு புதுப்பிக்கணும்

விளையாட்டு ஆர்வலர்கள் கூறியதாவது: தற்போது கிராமப்புற இளைஞர்களிடமும், விளையாட்டு ஆர்வம் வெகுவாக குறைந்து விட்டது. மொபைல்போனில், மூழ்கி, அடிப்படை உடற்பயிற்சிக்கு கூட இளைஞர்களும், மாணவர்களும், முக்கியத்துவம் அளிப்பதில்லை.ஒவ்வொரு ஆட்சிக்காலத்திலும், ஒரு வகையான திட்டத்தை அறிமுகம் செய்து விட்டு, பின்னர், கைவிடுவது தொடர்கதையாக உள்ளது. தற்போது பல வகை விளையாட்டுகளுக்கு உபகரணம் வழங்கினாலும், விளையாட மைதானம் இல்லை.இதனால் உபகரணங்களை காட்சிப்பொருளாக வைத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. தமிழக அரசு கோடை விடுமுறை காலத்தில் கிராமப்புற மாணவர்கள், இளைஞர்கள் பயன்பெறும் வகையில், பராமரிப்பில்லாத மைதானங்களை ஊராட்சி, ஒன்றிய நிர்வாகம் வாயிலாக புதுப்பிக்க வேண்டும்.குறிப்பிட்ட இடைவெளியில், விளையாட்டு போட்டிகளை நடத்த வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ