மேலும் செய்திகள்
'சிசிடிவி'யில் சிக்கிய திருடர்கள்
01-Feb-2025
பல்லடம்; காரணம்பேட்டை வரை, பிரத்யேக குடிநீர் குழாய் அமைத்து, குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்பது, பல்லடம் மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக உள்ளது.திருப்பூர் மாவட்டம், பல்லடம் தாலுகாவில், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். விவசாயம், விசைத்தறி, கறிக்கோழி உற்பத்தி, சாய ஆலைகள், பஞ்சு நுால் மில்கள் உள்ளிட்ட தொழில்கள் இங்கு பிரதானமாக உள்ளன.நகராட்சி உட்பட, தொகுதிக்கு உட்பட்ட பல்லடம், பொங்கலுார் ஒன்றிய பகுதிகளுக்கு, தினசரி, 2.50 கோடி லிட்டர் குடிநீர் வினியோகிக்கப்பட வேண்டும். ஆனால், பில்லுார் - அத்திக்கடவு கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலம், தினசரி, 1.75 கோடி லிட்டர் மட்டுமே குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. ஒவ்வொரு முறையும், 75 லட்சம் லிட்டர் குடிநீர் மாயமாவதால், பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் உள்ளாட்சி நிர்வாகங்கள் பரிதவிக்கின்றன.கோவை மாவட்டத்தில் இருந்த பல்லடம், கடந்த, 2009ம் ஆண்டு, திருப்பூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. ஆனால், குடிநீர் வினியோகம் மட்டும், கோவை மாவட்டம் வழியாகவே இன்றும் நடக்கிறது. இதன் காரணமாக, குடிநீர் சார்ந்த எந்த ஒரு கோரிக்கை மற்றும் குற்றச்சாட்டுகளாக இருந்தாலும், கோவை மாவட்டத்தை நாடவேண்டி உள்ளது.இதுவும், குடிநீர் வினியோகத்தில் பின்னடைவை ஏற்படுத்துகிறது. கோவை விளாங்குறிச்சியில் இருந்து, பல்லடம் தாலுகா, காரணம்பேட்டை வரை பிரத்யேக குடிநீர் குழாய் அமைத்து, குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உள்ளாட்சி நிர்வாகங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.இது தொடர்பாக, பல்லடம் நகராட்சி நிர்வாகம் சார்பிலும், நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனருக்கு கடந்த, 2022ம் ஆண்டே கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இத்திட்டம் இன்னும் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் உள்ளது.கோவையில், அமைச்சர் நேரு தலைமையிலான ஆய்வுக் கூட்டம் இன்று நடக்கிறது. குடிநீர் வினியோகம் தொடர்பாக நடக்க உள்ள இந்த ஆய்வுக் கூட்டத்தில், காரணம்பேட்டை வரை, பிரத்யேக குடிநீர் குழாய் அமைக்கும் திட்டம் செயல்பாட்டுக்கு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
01-Feb-2025