உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மக்கள் உட்காருவதை தடுக்க இப்படியுமா?

மக்கள் உட்காருவதை தடுக்க இப்படியுமா?

திருப்பூர்: திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், வாரந்தோறும் திங்கள் கிழமை நடைபெறும் குறைகேட்பு கூட்டத்தில், மனு அளிப்போர், உடன் வருவோர் என, 500 முதல் 600 பேர் வரை வந்து செல்கின்றனர். குறைகேட்பு கூட்டத்துக்கு வரும் மக்கள், அமர்வதற்கு, போர்டிகோ பகுதியில் எவ்வித இருக்கை வசதிகளும் செய்யப்படவில்லை. மனுக்களை அரசு அலுவலர்கள் ஆன்லைனில் பதிவு செய்யும்வரை, பொதுமக்கள் கால்கடுக்க காத்திருக்கவேண்டிய நிலையே தொடர்கிறது. கூட்ட நெரிசல், மனுக்கள் பதிவு செய்து கைக்கு கிடைப்பதில் தாமதம் ஏற்படும்போது, பெரும்பாலானோர், போர்டிகோ ரவுண்டானா முகப்பு பகுதியில் அமர்ந்திருப்பர். கடந்த, 3ம் தேதி நடந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றபோது, போர்டிகோவின் முகப்பு பகுதியில், சிமென்ட் பூச்சு வேலைகள் நடைபெற்றன. வழக்கமாக குறைகேட்பு கூட்டத்துக்குவரும் பொதுமக்கள் அமர்ந்து ஆசுவாசப்படுத்தும் முகப்பு பகுதியில், சிமென்ட் பூச்சுக்கு மேல் ஜல்லி கற்களை பதித்துள்ளனர். போர்டிகோ பகுதியில், ஜல்லி கற்களை பதித்து அழகு படுத்தவேண்டிய அவசியமில்லை. குறைகேட்பு கூட்டத்துக்கு வரும் மக்கள் அமரக்கூடாது என்ற நோக்கிலேயே, ஜல்லிக்கற்கள் பதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறைகேட்பு கூட்டம் நடைபெறும் நாட்களில், காத்திருக்க ஏதுவாக, போர்டிகோ பகுதியில் இருக்கை வசதி ஏற்படுத்த வேண்டுமென, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ