பாத யாத்திரை பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் உதவி
திருப்பூர்; பழநி பாதயாத்திரை பக்தர்களுக்கு உதவும் வகையில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக, திருப்பூர் வடக்கு மாவட்டம் - கோம்பை தோட்டம் கிளை சார்பில், குண்டடம் அருகே சூரியநல்லுாரில் டீ, காபி, பால், பிஸ்கெட், தண்ணீர் ஆகியவற்றை பக்தர்களுக்கு வழங்கி வருகின்றனர்.இப்பணியை மாவட்ட தலைவர் நசீர்தீன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் துவக்கி வைத்தனர். கிளை தலைவர் யூசப் தலைமையில் நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர்.அவர்கள் கூறுகையில், ''இரவு, 10:00 மணி முதல் ஆட்டோவில் சென்று, பக்தர்கள் வரக்கூடிய இடங்களில் நின்று அதிகாலை வரை வழங்கி வருகிறோம். நான்கு நாட்கள் வழங்க திட்டமிட்டு, 9ம் தேதி இரவு இப்பணியை துவங்கியுள்ளோம்.அன்றாடம், 5 ஆயிரம் தண்ணீர் பாட்டில், 2,500 பிஸ்கெட் பாக்கெட், 75 லிட்டர் பால் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இப்பணியை நான்காம் ஆண்டாக தொடர்கிறோம்'' என்றனர்.