காட்சிப்பொருளாக சேவை மையங்கள் கட்டடங்களும் வீணாகும் அவலம்
உடுமலை : ஊராட்சிகளில், சேவை மையங்கள் பயன்பாட்டுக்கு வராததால், கிராம மக்கள் அலைக்கழிக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது. கட்டடங்களும் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறி வருகிறது.தமிழக அரசு, பல்வேறு அரசுத்துறை சார்ந்த நலத்திட்டங்களுக்கு விண்ணப்பித்தல், சான்றிதழ் பெறுதல், கட்டணம் செலுத்துதல் ஆகிய நடைமுறைகளை கணிணிமயமாக்கியுள்ளது.எனவே, கிராம மக்கள், நலத்திட்டங்களுக்கு, விண்ணப்பிக்க, அருகிலுள்ள நகரங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. தாலுகா அலுவலகங்களில் உள்ள இ - சேவை மையங்களில், பல்வேறு காரணங்களால், குறைவான நபர்களுக்கு மட்டுமே சேவைகள் அளிக்கப்படுகிறது.இந்நிலையில், கிராமப்புற மக்களுக்கான இ - சேவையை அதிகரிக்க, மத்திய அரசு சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதன்படி, கிராமந்தோறும், கிராம சேவை மைய கட்டடங்கள் கட்டப்பட்டன.இந்த மையத்தில், அரசுத்துறை சார்ந்த திட்டங்களுக்கு விண்ணப்பித்தல், கட்டணம் செலுத்துதல், வேலை உறுதியளிப்பு திட்ட பயனாளிகளுக்கான சேவைகள் வழங்கப்படும்; ரயில் முன்பதிவு போன்ற இதர சேவைகளும் மக்களுக்கு வழங்கப்படும் என, திட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.சேவை மைய கட்டடத்துக்கு, வேலை உறுதியளிப்பு திட்டத்தில், தலா, 14 லட்சம் ரூபாய், நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. கட்டட பணிகள் நிறைவு பெற்று பல ஆண்டுகளாகியும், கிராம சேவை மையங்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை.உபகரணங்கள் ஒதுக்கீடு செய்யாமல், ஆட்கள் நியமிக்கப்படாததால், கிராம சேவை மையங்களை முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டு வர முடியவில்லை என, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.உடுமலை, குடிமங்கலம் ஒன்றியங்களில், 40க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில், சேவை மைய கட்டடங்கள் பரிதாப நிலைக்கு மாறி வருகின்றன; மக்களும் நகரங்களுக்கு அலைக்கழிக்கப்பட்டு, வேதனைக்குள்ளாகி வருகின்றனர்.சமீபத்தில், மத்திய அரசு திட்டத்தின் கீழ் சேவை மையங்களுக்கு இன்டர்நெட் இணைப்பு வழங்க, அனைத்து கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டது.எனவே, கிராம சேவை மைய கட்டடங்களை பயன்பாட்டுக்கு திறந்து, அனைத்து வகை சேவைகளும் மக்களுக்கு கிடைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.