பழநி பாதயாத்திரை பக்தரை பாதுகாக்க நடைபாதை அமைப்பது அவசியம்
பல்லடம்; பழநி பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி, பல்லடம்- தாராபுரம் ரோட்டில், பிரத்யேக நடைபாதை அமைக்க வேண்டியது அவசியம்.ஆண்டுதோறும் பழநியில் நடக்கும் தைப்பூச தேர்த்திருவிழாவில், தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர். திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்ட பகுதிகளில் இருந்து பல லட்சம் முருக பக்தர்கள், காவடி எடுத்தும், பாத யாத்திரையாகவும், பழநி செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். மேற்கூறிய மாவட்ட பகுதிகளில் இருந்து பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. பாதயாத்திரை செல்லும் பக்தர்கள், பல்லடம்- தாராபுரம் ரோட்டை பயன்படுத்தி பழநி செல்கின்றனர்.பல்லடம்- - தாராபுரம் ரோடு, சமீபத்தில் தான் நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. விரிவாக்கம் செய்யப்பட்ட இந்த ரோட்டில், வாகனங்கள் அசுர வேகத்தில் வந்து செல்கின்றன. இதனால், பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது. அதிலும், வெயிலின் தாக்கம் காரணமாக, பகல் நேரத்தை தவிர்த்து இரவு நேரங்களில்தான் அதிக பக்தர்கள் பாதயாத்திரை செல்கின்றனர். ஒளிரும் பட்டைகள் இல்லாமலும், போதிய வெளிச்சமின்மையாலும், பக்தர்கள் பாதுகாப்பின்றி பயணம் செய்கின்றனர்.பழநி பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் வசதிக்காக, திண்டுக்கல் -- பழநி செல்லும் வழித்தடத்தில், நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. அதுபோல், பல்லடம் -- தாராபுரம் ரோட்டிலும் பிரத்யேக நடைபாதை ஏற்படுத்த வேண்டும். ஆண்டுக்கு ஆண்டு, பழநிக்கு பாதயாத்திரை செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அதற்கு ஏற்ப பாதுகாப்பு நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டி உள்ளது. ஆண்டுதோறும், முருக பக்தர்கள் பலரும் இதனை வலியுறுத்தி வருகின்றனர். எனவே, பாதயாத்திரை பக்தர்களின் பாதுகாப்பு கருதி, பல்லடம்- - தாராபுரம் ரோட்டில் நடைபாதை அமைக்க வேண்டியது அவசியம்.